‘பணத்தை நம்பிதான் துரைமுருகன் தேர்தலை சந்திக்கிறார்’ ஆம்பூரில் ஏ.சி.சண்முகம் பேட்டி

பணத்தை நம்பிதான் துரைமுருகன் தேர்தலை சந்திக்கிறார் என்று ஆம்பூரில் ஏ.சி.சண்முகம் கூறினார்.

Update: 2019-04-07 23:15 GMT

ஆம்பூர்,

அ.தி.மு.க. கூட்டணியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா ஆகியோர் நேற்று கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ஆம்பூர் ஒ.ஏ.ஆர். தியேட்டர் பகுதி, நேதாஜி ரோடு, எஸ்.கே.ரோடு, பைபாஸ் சாலை, புதுமண்டி, ரெட்டித்தோப்பு, நீலிக்கொல்லை, சான்றோர்குப்பம், கே.எம்.நகர், பன்னீர்செல்வம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.

அப்போது ஆம்பூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.மதியழகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜி.ஏ.டில்லிபாபு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன், வாசுதேவன், த.மா.கா. மாவட்ட தலைவர் கே.குப்புசாமி, நகர தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் விஜயன், தே.மு.தி.க., பா.ம.க.வினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

அதைத்தொடர்ந்து ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சட்ட உதவி மையம் ஏற்படுத்தப்படும். அதில் ஞாயிற்றுக்கிழமை தோறும் எங்களது வக்கீல்களை வைத்து பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கப்படும். ஆண்டிற்கு 2 முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். தொகுதிக்கு ஒரு இலவச திருமண மண்டபம் கட்டப்படும். ஆண்டிற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வீதம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வேலூர் மாவடத்தின் வெயிலின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்அரசம்பட்டு உள்பட சில பகுதிகளில் அணை கட்டப்படும். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பணத்தை நம்பிதான் தேர்தலை சந்திக்கிறார். அவரது வீட்டில் முதலில் சோதனை செய்த போது வீராப்பு பேசினார். அடுத்த சோதனையில் பல கோடி சிக்கி உள்ளது. முதலில் இதற்கு காரணம் நான் தான் என்றார். பின்னர் சொந்த கட்சியினர் முதுகில் குத்திவிட்டனர் என்றார். இதன் மூலம் அவரது மகனை அவரது கட்சியினருக்கே பிடிக்கவில்லை.

தேர்தல் கருத்து கணிப்புகள் ஒருபுறம் இருக்கட்டும், மக்களின் கணிப்புதான் முக்கியம். அது அடுத்த மாதம் (மே) 23–ந் தேதி தெரிந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்