வைத்திலிங்கம் எம்.பி.யாக டெல்லி சென்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் நாராயணசாமி திட்டவட்டம்

வைத்திலிங்கம் எம்.பி.யாக டெல்லி சென்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-04-06 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று கதிர்காமம் தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

கதிர்காமம் தொகுதியில் வளர்ச்சி ஏற்படவும், வேலைவாய்ப்பு கிடைத்திடவும் நீங்கள் கை சின்னத்தை ஆதரிக்கவேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் புதுச்சேரிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்புகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்து புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவேன் என்றார். அதையும் நிறைவேற்றவில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

பெண்களுக்கு இடஒதுக்கீடும் வழங்கவில்லை. விவசாயிகளின் கடனையும் ரத்துசெய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் எதையும் செய்யவில்லை. கருப்பு பணத்தை ஒழிப்பதாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தார். இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.

புதுவையில் 5 ஆண்டுகால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அவர்கள் ஆட்சியில் இலவச அரிசி 15 மாதங்கள்தான் வழங்கப்பட்டது. நாங்கள் இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கினோம். ஆனால் அதை வழங்க விடாமல் கவர்னர் மூலம் தடை செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில்தான் முதியோர், விதவை, உடல் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை உரிய காலத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உரிய மானியத்தையும் வழங்குகிறோம்.

ஆனால் மக்களை ஏமாற்றி கடந்தமுறை ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் இந்த தொகுதி மக்களுக்கு ஒன்றைக்கூட செய்யவில்லை. எங்களை குறை சொல்ல அவர்களுக்கு அருகதை கிடையாது. இப்போது நடப்பது சட்டமன்ற தேர்தலும் அல்ல. இந்த தேர்தலில் யார் வெற்றிபெற்றால் டெல்லி சென்று நிதியை கொண்டுவர முடியும் என்று பார்க்கவேண்டும்.

நமது வேட்பாளர் வைத்திலிங்கம், முதல்–அமைச்சர், சபாநாயகர், அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பல பதவிகளை வகித்து மக்களுக்கு தொண்டாற்றியவர். அவர் எம்.பி.யாக டெல்லி சென்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும். ஆனால் எதிரணியில் உள்ளவருக்கு எந்த அனுபவமும் கிடையாது.

மக்கள் பிரதமர் மோடியை தூக்கி எறிய முன்வந்துவிட்டனர். ராகுல்காந்தி பிரதமரானால் வைத்திலிங்கம் மத்திய மந்திரியாகி புதுவைக்கான திட்டங்களை நிறைவேற்றுவார். புதுவையில் வளர்ச்சி ஏற்பட அனைவரும் கை சின்னத்தை ஆதரிக்கவேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்