அ.தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கிறது இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

Update: 2019-04-06 23:00 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி நடுத்தெரு பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தற்போது நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே நடக்கக்கூடிய போட்டி மட்டுமல்ல, நாட்டின் நலன் தொடர்புடையது. அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்க வரும்போது, கடந்த தேர்தலில் பிரதமர் மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக அளித்த வாக்குறுதிக்கு பதில் சொல்லிவிட்டு வாக்கு கேளுங்கள் என ஒவ்வொரு வாக்காளரும் கேட்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார். அதை இன்னும் தரவில்லையே, அதற்கு பதில் சொல்லிவிட்டு வாக்கு கேளுங்கள் என்று கேட்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் வாக்கு கேட்கும் மோடிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். தற்போது தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல. கூவத்தூரில் முதல்–அமைச்சர் பதவி ஏலம் எடுக்கப்பட்டது. முதல்–அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஏலம் எடுத்ததால், மாநில அரசின் உரிமைகள் கைவிட்டு போவது குறித்து அவர் கவலைப்படுவதில்லை. கல்லா கட்டுவது மட்டுமே அவரது முழுநேரப் பணியாக இருந்து வருகிறது. சட்டம்–ஒழுங்கு தமிழகத்தில் சரியாக இருக்கிறது என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக 300–க்கும் மேற்பட்ட மாணவிகளை அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் மகன்கள் சீரழித்துள்ளனர். வெளியூரில் பணியாற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் தங்களின் சொந்த ஊர் பெயரையே சொல்ல கூட வெட்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை நமது பகுதி பெண்களுக்கு ஏற்பட்டால் கொந்தளிப்பு வருமா, இல்லையா அதை வரும் தேர்தலில் மக்கள் காட்ட வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முழுமையான பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வு விலக்கு மசோதா அனுப்பப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

விருதுநகர் மாவட்டம் வறட்சியால் காய்ந்து போய் விவசாயம் பொய்த்து விட்டது. பட்டாசு தொழில் தற்போது மூடப்படும் சூழ்நிலையில் இருக்கிறது. மருத்துவ துணி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கடுமையான விதிமுறைகளால் தொழில் நசிந்து வருகிறது. மத்திய அரசு வருமான வரித்துறையை தவறான வழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை தேர்தல் பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. 2004–ம் ஆண்டு எவ்வாறு தி.மு.க.விற்கு சாதகமான அலை வீசியதோ அதே போன்ற அலை தற்போது வீசுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்

மேலும் செய்திகள்