திருப்பூர் சூசையாபுரத்தில் லாரியில் கொண்டு வந்து வீடு, வீடாக அரிசி மூடைகள் வினியோகம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை

திருப்பூர் சூசையாபுரத்தில் லாரியில் கொண்டு வந்து வீடு, வீடாக அரிசி மூடைகள் வினியோகம் செய்யப்பட்டதை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-04-06 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் ராயபுரம் சூசையாபுரம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் நேற்று இரவு 10½ மணி அளவில் ஒரு லாரியில் அரிசி மூடைகள், மற்றொரு சரக்கு ஆட்டோவில் சில்வர் பாத்திரங்கள், தேங்காய், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீடு, வீடாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு இவ்வாறு பொருட்கள் வினியோகம் நடப்பது குறித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக திருப்பூர் மாநகராட்சி உதவி பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் பறக்கும் படையும், திருப்பூர் மாநகராட்சி உதவி பொறியாளர் கவுரிசங்கர் தலைமையில் நிலை கண்காணிப்புக்குழுவும் சூசையாபுரம் பகுதிக்கு விரைந்தனர். அங்கிருந்தவர்களிடம், அரிசி மூடைகள் மற்றும் பொருட்கள் குறித்த விவரம் கேட்டனர். அதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள், தாங்கள் மாத சீட்டுக்கு பணம் செலுத்தி வந்ததாகவும், பணம் முதிர்வு பெற்றதால் அந்த தொகைக்கு அரிசி, சில்வர் குடங்கள் உள்ளிட்டவை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ளவர்களிடம் பறக்கும் படை அதிகாரிகள் துருவி, துருவி விசாரித்தனர். இரவு நேரத்தில் பொருட்களை வினியோகம் செய்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் 40–க்கும் மேற்பட்ட அரிசி மூடைகளுடன் லாரியையும், சில்வர் குடங்கள் உள்ளிட்ட பொருட்களைக்கொண்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்து பொருட்களை பெற்றுச்செல்லுமாறு அதிகாரிகள், அப்பகுதி மக்களிடம் கூறி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்