உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் வலிமையுடன் திகழ்கிறார்: “மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்” களக்காட்டில் பிரேமலதா பிரசாரம்
“பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வலிமையுடன் திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும்“ என்று களக்காட்டில் நடந்த பிரசாரத்தில் பிரேமலதா கூறினார்.
களக்காடு,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா களக்காட்டில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்கள் கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி. இளைஞர்கள் கூட்டணி. தொழிலாளர்கள் கூட்டணி. நான் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்துவிட்டு மக்களை நேரடியாக சந்தித்து விட்டு தற்போது களக்காடு வந்துள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பு தாருங்கள். இப்படி தோற்கின் எப்படை வெல்லும் என்ற வகையில் அமோக வெற்றியை தர வேண்டும். பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி.
நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நச்சு நீர் கலக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றால் தாமிரபரணியை மீட்டெடுப்போம். களக்காட்டில் மூடப்பட்டு உள்ள பொது மருத்துவமனையை மீண்டும் திறப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் வலிமையுடன் திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி.யை பொதுமக்களை பாதிக்காத வகையில் மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம். 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.
பிரேமலதா வருகையையொட்டி, மாலை முதலே களக்காடு அண்ணா சாலையில் கூட்டணி கட்சியினர் குவிய தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. களக்காடு புதிய பஸ் நிலையத்துக்கு வந்த பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.