பதற்றமான வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் தேர்தல் அதிகாரி அன்பழகன் தகவல்

கரூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறினார்.

Update: 2019-04-06 23:00 GMT
கரூர்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கரூர் மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் வாக்குப்பதிவு கண்காணிப்பு செயலி மூலம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அனுப்பும் வழிவகைகளை மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சிக்கூட்டம் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றவுள்ள அனைத்து அலுவலர்களும் நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். மண்டல அலுவலர்களாகிய நீங்கள் இங்கு வழங்கப்படும் பயிற்சியை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்க உள்ளர்கள். எனவே, தங்களுக்கு இந்தப்பயிற்சி வகுப்பின்போது ஏற்படும் சந்தேகங்களை வெளிப்படையாக கேட்டு தெரிந்துகொண்டு, அனைத்தையும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடத்தப்படக்கூடிய பயிற்சி வகுப்பில் தெளிவாக அவர்களுக்கு புரியும்படி எடுத்துக்கூற வேண்டும்.

குறிப்பாக தலைமை வாக்குப்பதிவு அலுவலர், வாக்குப்பதிவு கண்காணிப்பு செயலி மூலம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனுக்குடன் அறிக்கை அனுப்பும் வழிவகைகள் குறித்து மண்டல அலுவலர்களாகிய உங்களுக்கு இன்றைய பயிற்சி வகுப்பில் தெளிவாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை நீங்கள் அனைவரும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் எடுத்துரைக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படவேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுதல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அனைவரும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீத வாக்குச்சாவடி மையங்கள் சி.சி.டி.வி. கேமரா மூலம் நேரலையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிப்படும். குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகள், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படும் வாக்குச்சாவடிகள் என கரூர் மாவட்டம் முழுவதும் 69 வாக்குச்சாவடிகளில் 100 சதவீத சி.சி.டி.வி. கேமராவின் மூலம் நேரலை கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும்.

இந்த தேர்தலில் புதிதாகப் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டும் காட்டும் எந்திரத்தின் செயல்பாடு குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் தொகுதிக்குள்் வசித்து வந்தால் படிவம் 12யு மூலமும், பிறதொகுதியில் இருந்தால் படிவம் 12 மூலம் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரங்களை மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துக்கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை வாக்குப்பதிவு அலுவலர் வாக்குப்பதிவு கண்காணிப்பு செயலி மூலம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அனுப்பும் வழிவகைகளை மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சி வகுப்பினை தேசிய தகவலியல் அலுவலர் கண்ணன் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கூடுதல் அலுவலர் மோகன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்