நாடாளுமன்ற தேர்தலில் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் கி.வீரமணி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று கி.வீரமணி பேசினார்.

Update: 2019-04-06 23:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக மண்டல தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக திராவிடர் கழக மாவட்ட தலைவர் நீலமேகம் வரவேற்றார். திராவிடர் கழக பொது செயலாளர் துரைசந்திரசேகர், தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் தி.க. தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொள்கை கூட்டணி மற்றும் கொள்ளை கூட்டணிகளுக்கிடையே போட்டி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார். இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அடிமை அரசும் இருக்காது. ஜெயலலிதா ஆவியின் வழிகாட்டுதல் படி ஆட்சி நடத்துவதாக கூறுகிறார்கள். இவர்களை ஆவி கூட மன்னிக்காது. எங்களை பொறுத்தவரை ஆவியும் வேண்டாம், மோடியும் வேண்டாம். அவர்களுக்கு நோட்டாவுடன் போட்டி என்ற நிலை உள்ளது.

அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டார்கள். இந்தியாவை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் மீட்கவே இந்த போராட்டம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளது. சாமியார்களின் ஆசிரமத்திற்கு உள்ளே சென்றால், கருக்கலைப்பு செய்ய ஆஸ்பத்திரி வைத்துள்ளார்கள். அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. ராணுவத்தின் தியாகத்தை சுயநலனுக்காக மோடி பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சிகள் மீது வருமானவரித்துறை ஏவப்படுகிறது.

பா.ஜ.க. அரசு ஆகாயத்தில் ஊழல் செய்தது என்றால், எடப்பாடி பழனிசாமி அரசு தரையில் ஊழல் செய்கிறது. தேர்தல் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தென்மாநிலத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது. மோடி வித்தையால் ஆட்சிக்கு வந்தவர் மோடி. பா.ஜ.க. ஆட்சியில் நாலரை கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 2014, 2015-ம் ஆண்டில் 22 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.க. ஒன்றிய தலைவர் கருணாநிதி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்