ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீ நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.

Update: 2019-04-06 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுவதால் அங்கிருந்த மின் இணைப்புகளை மாற்றி பெண் நோயாளிகளின் வார்டுக்கு பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றபட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு மாற்றப்பட்டிருந்த மீட்டர் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கர்ப்பிணிகள் மற்றும் பெண் நோயாளிகளை நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். இதில் சில நோயாளிகள் அலறியபடி வெளியே ஓடி வந்து விட்டனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், 108 வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது.

பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் இருக்க தீயை அணைத்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்சாரம் வினியோகம் உடனடியாக நகர பகுதிகளில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஜெயங்கொண்டம் உதவி பொறியாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நடத்திய விசாரணையில், தரமற்ற வயர்கள் மற்றும் மின்சாதனப்பொருட்களை பயன்படுத்தியதும் மற்றும் அலட்சியமாக வேலை செய்ததுமே இந்த தீவிபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. பின்னர் அங்கு எலெக்ட்ரிக்கல் பணி செய்த தனியார் ஒப்பந்ததாரரிடம் தரமான வயர்கள் மற்றும் மின்சாதனப் பொருட் களை பயன் படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் மட்டுமே சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி முழுவதும் தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மருத்துவமனை பணியாளர்களின் சமயோசித நடவடிக்கையால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும் இதன் அருகிலே தான் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்றுவரும் சிகிச்சை மைய வார்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்