100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பணியை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

Update: 2019-04-06 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் 100 சதவீதம் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டை அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆனந்த் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் தவறாது அவர்களது வாக்கினை அளிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊரக பகுதிகள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கடந்த தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவாகும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திக்கடை, பொதக்குடி, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 10,650 வாக்காளர்களுக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நாளான்று தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டைகள் அஞ்சலக ஊழியர்கள் மூலம் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஸ்ரீலேகாதமிழ்செல்வன், அஞ்சலக துணை கண்காணிப்பாளர் உமாபதி, தபால் நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்