விருத்தாசலம், வடலூரில் வாகன சோதனை: உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

விருத்தாசலம், வடலூரில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2¼ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-06 22:45 GMT

விருத்தாசலம்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி தேன்மொழி தலைமையிலான குழுவினர் கருவேப்பிலங்குறிச்சி-பெண்ணாடம் சாலையில் சத்தியவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பரவலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும் உரிய ஆவணமின்றி ரூ.1½ லட்சம் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை விருத்தாசலம் தாசில்தார் கவியரசுவிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தாசில்தார் முரளி தலைமையிலான அதிகாரிகள் கடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் அய்யன் ஏரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்ததில், அதில் ரூ.75 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சாமளவாணன்(வயது 34) என்பதும், உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்