விருத்தாசலம் பகுதியில் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
விருத்தாசலம் பகுதியில் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு நடத்தினார்.
விருத்தாசலம்,
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் நடந்துவரும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் விருத்தாசலம் வந்தார். அப்போது விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை சரியாக செயல்படுகிறதா? என கலெக்டர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த அவர் அங்கு நடந்து வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது பணம் கடத்தலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு பறக்கும் படை அமைக்கலாமா?, வாக்குச்சாவடி முகவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறதா? வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அன்பு செல்வன் ஆலோசனை நடத்தினார். அப்போது சப்-கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், தாசில்தார் கவியரசு, துணை தாசில்தார் அன்புராஜ், வேல்முருகன், முருகன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.