அரசு சார்பு நிறுவன மதுபான பார்களை தனியாருக்கு வழங்குவதா? ரங்கசாமி எதிர்ப்பு

அரசு சார்பு நிறுவன மதுபான பார்களை தனியாருக்கு வழங்குவதற்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-05 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி காமராஜ் நகர் தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை முதல்-அமைச்சராக நான் இருந்தபோது அரசு சார்பு நிறுவனங்களை லாபத்தில் இயங்க செய்ய பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி உள்ளிட்டவற்றுக்கு மதுபான பார் உரிமம் வழங்கினேன். தற்போது ஒரு மதுபான பார் உரிமம் ரூ.4½ கோடி வரை விலை போகிறது. அங்கு ரூ.1 லட்சத்துக்கு விற்பனையானால் ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என சொல்வார்கள்.

அரசு சார்பு நிறுவனங்களுக்கு 70 உரிமங்களை வழங்கினேன். ஆனால் உரிமங்களை புதுப்பிக்கக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் தனியாருக்கு மதுபான பார்களை வழங்கிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். தனியார் என்றால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. க்கள்தான். ஆளாளுக்கு ஓரிரு பார்களை எடுத்துக்கொள்ள பார்க்கின்றனர். லாபம் வருவதை இவர்கள் எடுத்துக்கொண்டால் அரசு சார்பு நிறுவனங்கள் எப்படி லாபத்தில் இயங்கும்? 30 பார்களை தனியாருக்கு வழங்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. இதை கவர்னர் விசாரணை நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

பிரசாரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதுவை காங்கிரஸ் அரசு கடந்த 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தங்களது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி அவர்களால் வாக்குகேட்க முடியவில்லை. நாங்கள் ஆட்சி மாற்றம் வரும் என்றால் உங்களை ஜெயலில் பிடித்து போடுவோம் என்கிறார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவர்களை நீக்குவோம் என்கின்றனர். கவர்னர் கிரண்பெடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்க்கும்போது அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கவர்னருக்கு துணையாக இருந்தனர். எனக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை நடக்கும்போது கவர்னருக்கு ஆதரவாக என்னுடைய கொடும்பாவியை எரித்தவர்தான் அமைச்சர் நமச்சிவாயம். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தை கொண்டுவந்தார்கள்? அதில் எதை ரங்கசாமி நிறுத்தினார் என்று சொல்ல முடியுமா? இதுதொடர்பாக என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

மேலும் செய்திகள்