சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்க இட வசதி இல்லாததால் தஞ்சையில் 10 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் லாரிகள் - டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில், சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்க இடவசதி இல்லாததால் 10 நாட்களாக நெல் மூட்டைகளுடன் லாரிகள் காத்திருக்கின்றன. இதனால் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-05 23:04 GMT
தஞ்சாவூர், 

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல் அறுவடை பணிகளும், சம்பா நெல் அறுவடை பணிகளும் முடிவடைந்து விட்டது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல், மூட்டைகளில் சேகரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மேலவஸ்தாசாவடி, அம்மன்பேட்டை, புனல்குளம் ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.

அதேபோல தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் இறக்கப்படவில்லை.

நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால், லாரிகளில் இருந்து நெல் மூட்டைகள் இறக்கப்படவில்லை.

கடந்த 27-ந் தேதி முதல் நெல் மூட்டைகள் இறக்கப்படாததால் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சேமிப்பு கிடங்கு வளாகத்திலும், தஞ்சை-புதுக்கோட்டை சாலையோரத்திலும் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், சேமிப்பு கிடங்கின் நுழைவுவாயில் முன்பு நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் கூறும்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கடந்த 27-ந் தேதி நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு சேமிப்பு கிடங்கிற்கு வந்தோம். ஆனால் இடவசதி இல்லை என காரணம் காட்டி நெல் மூட்டைகளை இறக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

நாங்கள் சென்று கேட்டால் நாளைக்கு இறக்கி விடுவோம் என்று கூறி காலம் கடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக லாரிகள் நெல் மூட்டைகளுடன் நிற்கிறது. நாங்கள் இரவு, பகலாக சேமிப்பு கிடங்கிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நெல் மூட்டைகளை உடனே இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஏராளமானவை சென்று வருகின்றன. சாலையோரத்தில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் வளைவு பகுதியிலும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இடவசதி இல்லை என காரணம் காட்டி அடிக்கடி லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தப் படுகின்றன.

சேமிப்பு கிடங்குகளில் இடவசதி இல்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்