ஒரத்தநாடு அருகே நள்ளிரவில், தோட்டக்கலைத்துறை ஊழியரிடம் வழிப்பறி - 3 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஒரத்தநாடு அருகே நள்ளிரவில் தோட்டக்கலைத்துறை ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் விவேக்(வயது26). இவர் மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் பணியாற்றி வருகிறார். விவேக் நேற்று முன்தினம் நள்ளிரவில் மருங்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தென்னமநாட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தெற்கு நத்தம் காட்டாறு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது
விவேக்கை வழிமறித்த 3 வாலிபர்கள் அவரை மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய விவேக் தென்னமநாடு கிராமத்துக்குள் சென்று அங்கிருந்த இளைஞர்களிடம் நடந்த விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவர் அந்த கிராமத்து மக்களை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். இதை அறிந்த வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரும் மக்கள் பிடியில் சிக்காமல் தப்ப முயன்றனர்.
ஆனால் கிராம மக்கள் அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்து அவர்கள் பயன் படுத்திய ஸ்கூட்டருடன் அவர்களை ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களில் 2 பேர் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.