நடிகை சுமலதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சிக்கமகளூரு,
கர்நாடகத்தில் முதல்கட்டமாக வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில்முதல்-மந்திரியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் சுமலதா களத்தில் உள்ளார். அவருக்கு பா.ஜனதா ஆதரவு வழங்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் அதிருப்தியாளர்களும் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் நிகில் குமாரசாமி மற்றும் சுமலதா இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மண்டியா நாடாளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. காங்கிரசார், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்க மறுத்து வருவதால் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் மிகுந்த ஆதங்கத்தில் உள்ளனர். மேலும் மைசூரு-குடகு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்சங்கருக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஆதரவு கொடுக்க மறுத்து வருகிறார்கள். இதனால் கூட்டணி கட்சியினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.
கைமீறி சென்றுவிட்டது
இந்த நிலையில் இதுபற்றி முதல்-மந்திரி குமாரசாமி சிக்கமகளூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மண்டியாவில் நிலைமை கைமீறி சென்றுவிட்டது. சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு பா.ஜனதா, காங்கிரஸ், விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.
முடிவு எடுத்துவிட்டனர்
மண்டியா நிலை குறித்து தேவேகவுடா உண்மையை தான் கூறி இருக்கிறார். சில பேர், சில இடங்களில் சக்கரவியூகம் வகுத்து இருக்கலாம். மண்டியா மக்கள், நிகில் குமாரசாமியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டனர். எதையும் மறைக்காமல் இதை நான் மிக தெளிவாக கூறுகிறேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.