பிரமோத் மத்வராஜின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை பல லட்சம் ரூபாய் நகைகள், பணம் சிக்கியது
உடுப்பி-சிக்கமகளூரு கூட்டணி கட்சி வேட்பாளர் பிரமோத் மத்வராஜின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மங்களூரு,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் போட்டியிடுபவர் பிரமோத் மத்வராஜ். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஷோபா எம்.பி. போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன மேலாளரும், பிரமோத் மத்வராஜின் நெருங்கிய நண்பருமான சதாசிவா என்பவருக்கு சொந்தமான உடுப்பி டவுனில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் கணக்கில் காட்டப்படாத பல லட்சம் ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் அசையா சொத்துக்களின் பத்திரங்கள் ஆகியவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரம் விசாரணை
மேலும் அவர்கள் சதாசிவாவை விசாரணைக்காக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் சதாசிவாவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து நிருபர்கள் பிரமோத் மத்வராஜிடம் கேட்டனர். அப்போது அவர் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.