“விவசாயத்தை வாழ வைக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்” தென்காசியில் சீமான் பிரசாரம்
“விவசாயத்தை வாழ வைக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்“ என தென்காசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
தென்காசி,
தென்காசி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து, தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
13 கோடி பேர் கொண்ட மூத்த இனம், தமிழ் இனமாகும். இந்த இனத்தை பாதுகாப்பதற்கு யாரும் இல்லை. கச்சத்தீவை தி.மு.க. தாரை வார்த்து கொடுத்தது. இப்போது அதை மீட்க பாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்கள். ஆனால் ராகுல்காந்தி, கொடுத்ததை திரும்ப கேட்க முடியாது எனக்கூறுகிறார். இந்த கூட்டணிக்குள் இப்படியாக ஒற்றுமை உள்ளது. அ.தி.மு.க.விலும் இதே கருத்தை கூறுகிறார்கள். ஆனால் மோடி, கொடுத்ததை வாங்க முடியாது என்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீரர் அதிக ரன் எடுத்தாலோ, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினாலோ இந்திய வீரர் என்கிறார்கள். ஆனால் மீனவர் சுடப்பட்டால் தமிழக மீனவர் என்கிறார்கள். இந்திய மீனவர் என்று கூறுவதில்லை. அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எந்தவொரு முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து 5 தொகுதிகளில் முஸ்லிம்களை நிறுத்தி உள்ளோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் நாங்கள் கையெழுத்து போட சொல்லவில்லை என்று ராகுல்காந்தி கூறுகிறார். இனமானம், தன்மானம் கொண்ட தமிழ் இனத்தை பாதுகாக்க யாருமே இங்கு இல்லை. பணம் வாங்கி கொண்டு வாக்கு அளிக்காதீர்கள். ஊழலுக்கு துணை நிற்பவர்களும், பாவம் செய்பவர்கள்தான். தி.மு.க. 18 ஆண்டு காலத்தில் என்ன செய்தது? இப்போது என்ன செய்ய போகிறது. ஆட்சி மொழி என்று கூறுகிறார்கள். எத்தனை காலம் தான் இதை கூறுவீர்கள். அதனை நாங்கள் நம்புவதற்கு.
விவசாயம் இல்லை என்றால் நாளை எதை சாப்பிடுவீர்கள்? தொழிற்சாலைகளை வைத்து தொழிலை உருவாக்குங்கள். ஆனால் அதை வைத்து அரிசியை உருவாக்க முடியுமா? விவசாயத்தை வாழ வைக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். ஒரு மாற்றத்திற்காக நீங்கள் இதை செய்தால், வருங்காலம் செழிப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேட்பாளர் மதிவாணன், கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் தினகரன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அருண் சங்கர், தென்காசி தொகுதி தலைவர் அழகுபாண்டியன், செயலாளர் வின்சென்ட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.