மத்திய, மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

மத்திய மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Update: 2019-04-05 21:45 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலையில் கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

பின்னர் அவர், லட்சுமி மில் மேல காலனி, கிருஷ்ணாநகர், சாலைப்புதூர், இ.பி.காலனி, ஆலம்பட்டி, படர்ந்தபுளி, தோணுகால், என்.துரைச்சாமிபுரம், முடுக்குமீண்டான்பட்டி, நாலாட்டின்புத்தூர், கோபாலபுரம், நாச்சியார்புரம், இடைசெவல், சத்திரப்பட்டி, மெய்தலைவன்பட்டி, வில்லிசேரி, ஊத்துப்பட்டி, மந்திதோப்பு, அன்னைதெரசா நகர் ஆகிய பகுதிகளில் சென்று தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளார். கோவில்பட்டியை வளர்ச்சி அடைந்த நகரமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். அதேபோன்று தூத்துக்குடியை வளர்ச்சி அடைந்த மாவட்டமாக, தூய்மையான மாவட்டமாக, தொழில் முனைவோர்களை உருவாக்கக்கூடிய மாவட்டமாக, வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது.

கோவில்பட்டி பகுதியில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகளவில் உள்ளனர். மில் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.

அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுகிறவர்களுக்குக்குதான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மாறாக கடைக்காரர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், பொருளாதாரத்தில் நலிவடைந்து முதுமையில் வாடினர். இவர்களின் துயரங்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, 60 வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.

தமிழகத்திலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வறுமைக்கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை கொள்கிற மத்திய, மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

பெரும்பாலானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு படிக்காமலே பல டாக்டர் பட்டங்களை பெறுவார்கள். ஒருவேளை டாக்டராக சரியாக படிக்காததால் தமிழிசை அரசியலுக்கு சென்று விட்டாரோ? என்று சிலர் கருதலாம். ஆனால் நான் அவ்வாறு இல்லை. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் சென்று படித்தேன். எனது மருத்துவமனையில் இரவு 2 மணி வரையிலும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை கருவிலே சரி செய்யக்கூடிய படிப்பு படித்து உள்ளேன். தமிழகத்திலேயே சுரேஷ் என்பவரும், நானும்தான் வெளிநாடுகளில் சென்று அந்த படிப்பை படித்துள்ளோம். என்னிடம் சிகிச்சைக்காக வருகிறவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து காத்திருந்து சிகிச்சை பெற்றனர். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக பணிபுரிந்தேன். நான் நினைத்து இருந்தால் சுயநலமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் நான் எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றியது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவது உறுதி.

நாடு முழுவதும் தொழில்வளம் பெருக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். இங்கு எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முறைகேட்டால் திகார் ஜெயிலில் இருந்தவர். ஆனால் நான் என்றும் மக்களுக்கு சேவையாற்றுவதையே கடமையாக கொண்டுள்ளேன். நான் என்றும் இந்த மண்ணின் சொந்தக்காரிதான். என்றும் உங்களின் சகோதரிதான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் நாராயணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்