மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் கனிமொழி எம்.பி. பேச்சு
மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் ஆழ்வார்திருநகரியில் திறந்த வேனில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் அவர், கேம்பலாபாத், பால்குளம், திருக்கோளூர், செம்பூர், வெள்ளமடம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு, அம்பலசேரி, கட்டாரிமங்களம், புளியங்குளம், கருங்கடல், பேய்க்குளம், பழனியப்பபுரம், தேர்க்கன்குளம், மணல்விளை, மல்லல், புதுக்குளம், அரசர்குளம், தெற்கு காரசேரி, தாதன்குளம், கருங்குளம், தூதுகுழி, செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலானது மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல், பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தல். சரக்கு, சேவை வரி விதித்ததாலும், உயர் பணமதிப்பு இழப்பு செய்ததாலும், சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய பா.ஜனதா அரசு, ஏற்கனவே வேலை செய்தவர்களின் வேலையையும் பறிக்கின்ற நிலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய பா.ஜனதா அரசு, விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை, வறட்சி நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டா கனியாக்க நீட் தேர்வை திணித்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்கள் தற்கொலை செய்த துயரம் ஒரு போதும் ஆறாது.
ஸ்டெர்லைட் ஆலையே பா.ஜனதா சார்பில் ஒரு வேட்பாளரை களத்தில் நிறுத்தி உள்ளது. அந்த ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடியபோது, அவர்களிடம் முதல்-அமைச்சரோ, அமைச்சரா, அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ சென்று பேசவில்லை. 100-வது நாளில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொன்றனர்.
1,000 பேரை காப்பாற்றுவதற்கு 13 பேரை கொல்வதில் தவறில்லை என்ற பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்தான் தற்போது இங்கு பா.ஜனதா வேட்பாளராக உள்ளார். மண்ணையும், மக்களையும் நேசித்தவர்களை சுட்டு கொல்வதில் தவறில்லையாம். பா.ஜனதா வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்வதுதான், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் செலுத்துகிற அஞ்சலியாக அமையும்.
வட மாநிலங்களில் மத கலவரங்களை ஏற்படுத்தி, மக்களை பிரித்தாளக்கூடிய தந்திரங்களை பா.ஜனதா அரசு செய்து வருகிறது. தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகத்தையே பா.ஜனதா அரசு செய்து வந்துள்ளது. தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோதும் வராத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தேர்தலுக்கு முன்னதாக 3 முறை வந்து விட்டார். இன்னும் எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.
ஒரு சில பெரு வணிக நிறுவனங்களுக்காகவே முழுவதும் செயல்படும் பிரதமர் நமக்கு தேவையில்லை. எப்போதும் வெளிநாட்டிலே இருக்கக்கூடிய பிரதமர் நமக்கு தேவையில்லை. இனி அவர் நிரந்தரமாக வெளிநாட்டிலேயே இருந்து விடலாம். அதேபோன்று பா.ஜனதா அரசின் எடுபிடியாக கைப்பாவையாக செயல்படும் அ.தி.மு.க. அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட பிரதமராக ராகுல்காந்தி விரைவில் வர உள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும். அப்போது தமிழகத்தின் அனைத்து உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் காக்கப்படவும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். நான் என்றும் உங்களுடனே வாழ்ந்து உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.