மனைவி கொலை தொடர்பாக ராணுவ வீரருக்கு போலீஸ் வலைவீச்சு
மனைவி கொலை வழக்கில் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகிறார்கள்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). இவரது மனைவி கவுதமி (29). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜேஷ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கவுதமி நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலையணையால் அவரை முகத்தை அமுக்கி யாரோ கொலை செய்திருந்தனர். இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொலையுண்ட கவுதமியின் சகோதரர் சரவணன் (40) குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் கவுதமியின் கணவர் ராஜேசிற்கும், பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதை கவுதமி தட்டி கேட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஷ் ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தான் கவுதமி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ராஜேசும் தலைமறைவாகி விட்டார். இதனால் மனைவியை ராஜேஷ் கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.