பொதுமக்களுக்கு வாக்குச்சீட்டுகளை விரைந்து வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவு
பொதுமக்களுக்கு வாக்குச்சீட்டுகளை விரைந்து வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.;
ஈரோடு,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட திண்டல் காரப்பாறை பகுதியில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:–
நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட பல்வேறு பணிகளை ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறோம். அதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பிரித்து அனுப்பி வைத்தல் மற்றும் அலுவலர்களை நியமித்தல், அஞ்சல் வாக்கு சீட்டுகளை அனுப்பி வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டுகள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை வருகிற 12–ந் தேதிக்குள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டுகள், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கையொப்பத்துடன் வாக்காளர் அல்லது அவரது குடும்பத்திலுள்ள 18 வயது பூர்த்தியான உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். எனவே வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து புகைப்பட வாக்குச்சீட்டினை பெற்றுக் கொண்டு தேர்தல் நாளான வருகிற 18–ந் தேதி தவறாமல் தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.