சேலத்தில் ஐஸ்கிரீம் பார்லரில் இளம்பெண்ணை குத்திக்கொன்று கள்ளக்காதலன் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
சேலத்தில் ஐஸ்கிரீம் பார்லரில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.;
சேலம்,
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் சூரமங்கலம் ஆசாத் நகரை சேர்ந்தவர் சாகுல். இவருடைய மனைவி ஷெரின் சித்தாராபானு (வயது 25). குடும்ப பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் கணவரை பிரிந்து தன் குழந்தையுடன், பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அங்கிருந்து காசக்காரனூர் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் ஷெரின் சித்தாராபானு வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் இனாமுல்லா (54). மனைவியை பிரிந்து வசித்து வந்த இவர், வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பி வைக்கும் ஏஜெண்டு தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த ஷெரின் சித்தாராபானு, இனாமுல்லாவை தொடர்பு கொண்டு வேலை கேட்டுள்ளார். அப்போது அவர் வெளி நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நெருங்கி பழகி வந்தனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக இனாமுல்லாவுடன் பேசுவதை ஷெரின் சித்தாராபானு திடீரென நிறுத்திக்கொண்டார். இதனால் அவர் தன்னிடம் பேசுமாறும், திருமணம் செய்து கொள்ளும்படியும் ஷெரின் சித்தாராபானுவை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஷெரின் சித்தாராபானு மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்தநிலையில், நேற்று காலை வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்றார். அப்போது ஐஸ்கிரீம் பார்லரில் யாரும் இல்லாததை அறிந்த இனாமுல்லா, கடைக்குள் திடீரென்று புகுந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஷெரின் சித்தாராபானு மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஏற்கனவே தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார். அப்போது ஷெரின் சித்தாராபானு கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டனர்.
ஆனால் பொதுமக்கள் வந்துவிடுவார்களோ? என பயந்த அவர் கடையின் ஷட்டரை பூட்டிக்கொண்டார். பின்னர் கத்தியை எடுத்து ஷெரின் சித்தாராபானுவின் வயிறு, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். இதையடுத்து இனாமுல்லா அந்த கடைக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷெரின் சித்தாராபானு கொலை செய்யப்பட்டும், இனாமுல்லா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணை கொலை செய்து விட்டு இனாமுல்லா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இனாமுல்லா எழுதி இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-
ஷெரின் சித்தாராபானுவுடன் எனக்கு கடந்த 4 வருடங்களாக தொடர்பு இருந்தது. எங்களது தகாத உறவினால் நான் எனது குடும்பத்தை இழந்து அனாதையாகிவிட்டேன். ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து தவித்து வந்தநிலையில் அவரை திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் வாழலாம் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்வது சம்பந்தமாக 10 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி கொடுத்தேன்.
அதில், நான் உன்னை முழுமையாக நம்புகிறேன். உனக்கு உண்மையான கணவனாக வாழ்ந்து உனது களங்கத்தை என்னால் ஏற்பட்ட அவமானங்களை முழுமையாக நீக்கிட உறுதி அளிக்கிறேன். எனது மனைவி, மகள், உறவினர்கள் அனைவரும் என்னை முழுமையாக ஒதுக்கி விட்டார்கள் என கூறி இருந்தேன்.
இறுதியான எனது முயற்சியையும் அவள் உதாசீனப்படுத்தி விட்டாள். இதனால் ஷெரின் சித்தாராபானுவை கொலை செய்து விட முடிவு செய்து, இதனை நிறைவு செய்கிறேன். வாழ்வதற்கான தகுதியை நான் இழந்து விட்டேன். நான் எனது பாவத்தை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக எங்கள் இருவரின் மரண தண்டனையை நிறைவேற்றுகிறேன். எங்கள் இருவரின் குடும்பத்தினர் எங்களை மன்னிக்க வேண்டும். இப்படிக்கு பாவத்தால் கொலை மற்றும் தற்கொலைக்காரன் இனாமுல்லா என எழுதி கையெழுத்து போட்டு உள்ளார். நான் செய்யப்போகும் கொலைக்கும், தற்கொலைக்கும் நானே பொறுப்பு.
இவ்வாறு அந்த கடிதத்தில் இனாமுல்லா எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.