சித்ரா பவுர்ணமியன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

சித்ரா பவுர்ணமியன்று மேற்கொள்ள வேண்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

Update: 2019-04-05 23:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு பவுர்ணமியன்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் சித்திரை மாதத்தில் வருகின்ற பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவதால் அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த ஆண்டு வருகிற 18–ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7.05 மணி அளவில் பவுர்ணமி தொடங்கி மறுநாள் 19–ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா பவுர்ணமியன்று மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் காவல்துறை, வருவாய்த்துறை, கோவில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊராட்சி வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, வனத்துறை, மின்சார வாரியம், போக்குவரத்து கழகம், போக்குவரத்துத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை உள்பட பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் சித்ரா பவுர்ணமியன்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக 18–ந் தேதியன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அன்றைய தினம் இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக நடை திறந்து இருக்கும். மேலும் 19–ந் தேதியும் அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு தொடர்ச்சியாக இரவு வரை நடை திறந்திருக்கும்.

பின்னர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ச்சியாக இரவு வரை நடை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் ரூ.50–க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதிகளவில் பக்தர்கள் வருகை புரிவதை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி அன்றைய தினம் சுவாமி, அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகராட்சி சார்பில் 9 தற்காலிக பஸ் நிலையங்களிலும் மின்சார வசதி, விளக்குகள், குடிநீர், கழிவறை, குப்பை தொட்டிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

தற்காலிக கார் பார்கிங் வசதி மற்றும் மருத்துவ முகாம்களும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை, மோட்டார் சைக்கிள் வாகன சேவைகளும், கிரிவலப்பாதையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இலவச மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

மின்சார வாரியம் மூலமாக தடையில்லா மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவண்ணாமலைக்கு வரும் 9 அணுகு சாலைகளிலும் சீரமைக்கும் பணிகள், உணவு பாதுகாப்புத்துறை மூலமாக அன்னதானம், உணவகங்கள், கடைகள் உள்பட அனைத்து இடங்களிலும், கூடுதல் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு தனித்தனி குழுவாக சென்று உணவு தரம் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மூலமாக அன்னதானம் வழங்கும் இடங்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று அனுமதி வழங்குவதற்கும், கிரிவலப் பாதையில் கழிவறை, குடிநீர், தெரு விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து கழகம் மூலமாக கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. காவல் துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை மூலமாக கோவில் வளாகம், கிரிவலப்பாதை, தற்காலிக பஸ் நிலையங்களிலும் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சித்ரா பவுர்ணமியன்று பல்வேறு துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெயசுதா, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்