சமையல் மற்றும் வாகனங்களுக்கு நிரப்பப்படும் கியாஸ் விலை உயர்வு
சமையல் மற்றும் வாகனங்களுக்கு நிரப்பப்படும் கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் வீடுகளுக்கு குழாய் மூலம் மாநில அரசின் மகாநகர் நிறுவனம் கியாஸ் (பி.என்.ஜி.) வினியோகித்து வருகிறது. இதற்கான கட்டணம் மீட்டர் மூலம் அளவிடப்படுகிறது.
இந்தநிலையில் குழாய் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கும் கியாசின் விலையை மகாநகர் நிறுவனம் அதிகரித்து உள்ளது.
இதில் ஒரு கன மீட்டர் கியாசின் விலை ரூ.29.40-ல் இருந்து ரூ.31.53 ஆக அதிகரித்து உள்ளது. மானியம் வேண்டாம் என விட்டு கொடுத்தவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்த கியாசின் விலை கன மீட்டர் ரூ.35-ல் இருந்து ரூ.37.13 ஆக அதிகரித்து உள்ளது.
வாகன கியாஸ்
இதேபோல வாகனங்களுக்கு நிரப்பப்படும் கியாசின் (சி.என்.ஜி.) விலை கிலோவுக்கு ரூ.49.61-ல் இருந்து ரூ.51.57 ஆக அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வுக்கு டாக்சி டிரைவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மும்பை டாக்சி டிரைவர்கள் சங்க தலைவர் குட்ரோஸ் கூறியதாவது:-
நாங்கள் நீண்ட காலமாக டாக்சி கட்டணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்து வருகிறோம். டாக்சி கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் நாங்கள் கோரிக்கை விடுத்த காலத்தில் இருந்து தற்போது வரை ரூ.9.50 வரை கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.