ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறும் போலீசாருக்கு விரும்பும் இடத்துக்கு பணி இடமாற்றம் நாசிக் போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறும் போலீசாருக்கு விரும்பும் இடத்துக்கு பணி இடமாற்றம் வழங்கப்படும் என நாசிக் போலீஸ் கமிஷனர் அறிவித்து உள்ளார்.

Update: 2019-04-04 22:10 GMT
மும்பை,

போலீசார் கால வரையறை இன்றி வேலை பார்ப்பவர்கள். அதிக வேலைப்பளுவால் பெரும்பாலான போலீசார் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை. அவர்கள் போதிய ஓய்வின்மை காரணமாக அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் மற்றவர்களை காட்டிலும் எளிதில் உடல் எடை அதிகரிக்கின்றனர்.

இந்தநிலையில், போலீசார் உடல்நலனை காப்பதில் ஆர்வம் செலுத்தும் வகையில் நாசிக் போலீஸ் கமிஷனர் விஸ்வாஸ் நன்காரே பாட்டீல் புதிய முயற்சி ஒன்றை எடுத்து உள்ளார். இதில் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் முதலில் வருபவர்களுக்கு நாசிக்கில் விரும்பும் போலீஸ்நிலையம், துறைக்கு பணிஇடமாற்றம் தருவதாக அறிவித்து உள்ளார்.

முதல் 25 இடம்

இதுகுறித்து நாசிக் போலீஸ் தலைமையகம், போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் போலீசாருக்கு பரிசு அளிக்க உள்ளோம். போலீஸ் கான்ஸ்டபிள் முதல் உதவி இன்ஸ்பெக்டர் வரை இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட போலீசாருக்கு 10 கி.மீ. தூர ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். இதில் முதல் 25 இடங்களுக்குள் வருபவர்களுக்கு விரும்பும் இடத்துக்கு பணி இடமாற்றம் அளிக்கப்படும்.

40 முதல் 50 வயது

இதேபோல 30 முதல் 40 வயது மற்றும் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட போலீசாருக்கு தனித்தனியே 5 கி.மீ. ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு அதிலும் முதல் 25 இடங்களுக்குள் வருபவர்களுக்கு நாசிக்கில் உள்ள 14 போலீஸ் நிலையங்களில் விரும்பும் இடத்துக்கு பணிஇடமாற்றம் வழங்கப்படும்.

இதேபோல குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு செல்ல விரும்பும் போலீசாருக்கு ஓட்டப்பந்தயத்துடன் உடலில் உள்ள கொழுப்பு சதவீத (பி.எம்.ஐ.) சோதனையும் மேற்கொள்ளப்படும்.

100 போலீசார்

இதுகுறித்து நாசிக் போலீஸ் கமிஷனர் விஸ்வாஸ் நன்காரே பாட்டீல் கூறுகையில், ‘‘ஆண்டு தோறும் 800 முதல் 900 போலீசார் பணிஇடமாற்றம் செய்யப்படுன்றனர். எனவே உடல் தகுதியுடன் உள்ள 100 போலீசாருக்கு விரும்பும் இடத்துக்கு பணிஇடமாற்றம் வழங்கலாம் என முடிவு செய்து உள்ளோம்.

போலீசார் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம்’’ என்றார்.

ஆதரவும், விமர்சனமும்

எனினும் கமிஷனரின் இந்த முடிவுக்கு விமர்சனங்களும் எழுந்து உள்ளன. இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘நல்ல நோக்கத்துடன் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் போலீசார் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார்கள். இதில் சிலர் உடல்தகுதியுடன் மட்டுமே இருப்பார்கள். அவர்களுக்கு வேலை பற்றி எதுவும் தெரியாது. அதுபோன்றவர்களுக்கும் நல்லதுறையில் பணிஇடமாற்றம் கிடைக்கும்’’ என்றார்.

முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் எம்.என்.சிங், நாசிக் கமிஷனரின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘போலீசார் உடல்தகுதியுடன் இருப்பது முக்கியமானது. சமீபகாலமாக போலீசார் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளன. மேலும் நாசிக், மும்பை போன்ற பெருநகரங்களை சமாளிக்க போலீசார் உடல் தகுதியுடன் இருக்கவேண்டும். எனவே இதுபோன்ற புதிய முயற்சிகள் மூலம் போலீசார் நல்ல உடல் தகுதியுடன் இருக்க முடியும்’ என்றார்.

மேலும் செய்திகள்