மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி தங்கிய ஓட்டலில் வருமானவரி அதிகாரிகள் சோதனை தேவேகவுடா கண்டனம்
மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி தங்கியிருந்த ஓட்டலில் வருமானவரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டியா,
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா நாடாளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறிவிட்டது எனலாம்.
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம்
ஏனெனில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் சுமலதா- நிகில் குமாரசாமி ஆகியோர் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணம் கொடுத்து வருவதாகவும் நடிகை சுமலதா மற்றும் பா.ஜனதாவினர் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கிடையே கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி ஹாசன், மண்டியாவில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதாவது ஹாசனில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் ஆதரவாளர்களான ஒப்பந்ததாரர்கள், மண்டியாவில் மந்திரி சி.எஸ்.புட்டராஜுவின் வீடு மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது.
காங். முன்னாள் மந்திரி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமானவரித் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய குமாரசாமி, எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமானவரித் துறையை ஏவி சோதனை நடத்தி பா.ஜனதா அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் மண்டியா மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆத்மனாந்தா கூட்டணி கட்சி வேட்பாளரான நிகில் குமாரசாமிக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருமானவரித் துறையினருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மண்டியா சுபாஷ் நகரில் உள்ள அவரது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ரூ.10 லட்சம் பறிமுதல்
இந்த சோதனையின் போது அவரது வீட்டில் ரூ.10 லட்சம் சிக்கியது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை ஆத்மானந்தாவிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். அதுபோல் சில முக்கிய ஆவணங்களும் வருமானவரித் துறை சோதனையில் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைதொடர்ந்து வருமானவரித் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி ஆத்மானந்தாவுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் மண்டியா மாவட்ட காங்கிரசார், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரசாமி தங்கிய ஓட்டலில் சோதனை
இதற்கிடையே மண்டியா நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வந்திருந்தார். அவர் அங்குள்ள ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கே.ஆர்.எஸ். அணைக்கட்டு அருகில் உள்ள பிருந்தாவன் கார்டன் என்ற ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை அவர் உத்தரகன்னடாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதே ஓட்டலில் தான் நிகில் குமாரசாமி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அடிக்கடி இந்த ஓட்டலுக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் குமாரசாமி மற்றும் நிகில் குமாரசாமி தங்கியிருந்த அந்த ஓட்டலில் வருமானவரித் துறையினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் ஒவ்ெவாரு அறையாக சென்று துருவி, துருவி சோதனையிட்டனர். ஆனால் இந்த சோதனையில் அந்த ஓட்டலில் இருந்து பணம் எதுவும் சிக்கியதாக தெரியவில்லை.
பதற்றம்
முதல்-மந்திரி குமாரசாமி, கூட்டணி கட்சி வேட்பாளர் நிகில்குமாரசாமி தங்கியிருந்த ஓட்டலில் ஒரே நேரத்தில் சுமார் 30 அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக வருமானவரி சோதனை பற்றி தகவல் அறிந்ததும் அங்கு காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கூடியிருந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
தேவேகவுடா கண்டனம்
இந்த நிலையில் ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியினரை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரி சோதனையை நடத்தி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியினரை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்தி மத்திய அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்றார்.