பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி கருப்பு கொடி ஏந்தி நரிக்குறவர்கள் போராட்டம் - தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு

பழனி அருகே பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி கருப்பு கொடி ஏந்தி நரிக்குறவர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-04-04 22:30 GMT
நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே பெத்தநாயக் கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சுக்கமநாயக்கன்பட்டி. இங்கு 3-வது வார்டில் உள்ள நரிக்குறவர் காலனியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பாசிமாலைகள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் கள். இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் தங்களது வீடுகள் மற்றும் மின் கம்பங்களில் கருப்பு கொடியை ஏற்றினர். மேலும் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகள் தொடர்பான மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மனு எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்களது பகுதியில் கட்டப்பட்டிருந்த கருப்பு கொடியை அகற்றினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்காததால் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எங்கள் பகுதி மக்களுக்கு, பழனி அடிவாரம் பகுதியில் பாசி மாலைகள் விற்பனை செய்ய போலீசார் அனுமதி அளிக்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்