தேர்தல் பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் நடனங்களை அரங்கேற்றக்கூடாது - நல்லசாமி வலியுறுத்தல்
தேர்தல் பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் நடனங்களை அரங்கேற்றக்கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி ஊட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டி,
மத்திய அரசு மாநில அரசின் கல்வி கொள்கையை பறித்துக் கொண்டதாக அ.தி.மு.க., தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்து வருகின்றன. ஆனால், உள்ளாட்சித் துறையிடம் இருந்த கல்வி, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாநில அரசு எடுத்துக்கொண்டது. இதனால் உள்ளாட்சிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது. இந்த பணிகள் அனைத்தையும் உள்ளாட்சிகளுக்கு வழங்கினால், மக்கள் பயன் அடைவார்கள்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு மானியம் வழங்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களுக்கு அரசு மானியம் வழங்கி, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை காக்க பெட்ரோலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது. அதற்கு பதிலாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தினால், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 60 சதவீதம், 2017-ம் ஆண்டு 9 சதவீதம் மழை குறைவாக பெய்து உள்ளது. பசுபிக் கடலில் எலினோ ஆராய்ச்சி மூலம் தமிழகம் மட்டுமல்ல, நாட்டில் பல்வேறு இடங்களில் மழையின் அளவு குறையும் என்று தெரியவந்து இருக்கிறது. எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இல்லை. இதை மாற்றி வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், தரமான கல்வி வழங்க வேண்டும்.
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்களை சில ஏஜெண்ட்டுகள் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்கின்றனர். காலை மற்றும் மாலையில் வெவ்வேறு அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு உணவு, உடை போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் மக்கள் மனதில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றால், உணவு, உடை கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.
அதன் காரணமாக தற்போது மஞ்சள் அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் வர தாமதம் ஏற்பட்டால், மேடையில் பெண்களை வைத்து கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் நடனம் அரங்கேற்றி கூட்டம் சேர்க்கப்படுகிறது. இதுபோன்ற நடனங்களை அரங்கேற்றக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.