நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் உசன் லால் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-04-04 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரத்து 740 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 லட்சத்து 57 ஆயிரத்து 991 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 91 ஆயிரத்து 684 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 65 பேர் உள்ளனர்.

ஆண்களை விட 33 ஆயிரத்து 693 பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் ஆயிரத்து 610 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஊட்டி-239, கூடலூர்(தனி)-221, குன்னூர்-223, மேட்டுப்பாளையம்-321, அவினாசி(தனி)-312, பவானிசாகர்-294 என வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர்கள் வாக்களித்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கவும், வாக்கு எண்ணிக்கை நடத்தவும் தேர்தல் ஆணையம் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை தேர்வு செய்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டு உள்ளது. அதனை தொடர்ந்து, நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் (வி.வி.பேட்) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி வரை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனி அறைகள் என மொத்தம் 6 அறைகளில் உள்ள ஜன்னல்கள் தகரம் கொண்டு மூடப்பட்டு உள்ளன. மேலும் வாக்கு எண்ணும் 6 அறைகளில் ஏஜெண்ட்டுகள் நேரடியாக பார்க்கும் வகையில், குறிப்பிட்ட இடைவெளியில் கம்புகள் வைத்து வலை அமைக்கப்பட்டு உள்ளது. அறைகளில் உள்ள கதவுகளும் தகரம் கொண்டு மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று தேர்தல் பொது பார்வையாளர் உசன் லால் நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசையாக அடுக்கி வைக்கும் பொருட்டு, வர்ணம் பூசி வரிசை எண் போடப்பட்டதை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊட்டி தாசில்தார் மகேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்