‘வெற்றி நிச்சயம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நாளை நடக்கிறது

‘தினத்தந்தி’ - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும், ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நிகழ்ச்சியை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ்பாபு தொடங்கி வைக்கிறார்.

Update: 2019-04-04 21:45 GMT
நெல்லை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்கள், அடுத்ததாக என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? அதற்காக எந்த படிப்பை தேர்வு செய்வது? என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக, ‘தினத்தந்தி‘ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ‘வெற்றி நிச்சயம்’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 17 ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி 18-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்காக ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியை ‘தினத்தந்தி’ - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்துகிறது. இந்த ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அரங்கில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்வித்துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், வல்லுனர்கள் பேசுகின்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசுகிறார். கல்விப்பணியில் ‘தினத்தந்தி’ என்ற தலைப்பில் சென்னை ‘தினத்தந்தி’ தலைமை பொதுமேலாளர் (புரமோஷன்) ரெ.தனஞ்செயன் பேசுகிறார். ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ்பாபு தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகிறார்.

தொடக்க விழா முடிந்ததும் பொறியியல் துறை பற்றி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் துறை உதவி பேராசிரியர் உ.லெனின் மார்க்‌ஷியா பேசுகிறார். மருத்துவத்துறை பற்றி சென்னை ஆவடி செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை பேராசிரியை ஆர்.காயத்ரி பேசுகிறார். சட்டத்துறை பற்றி சேலம் வழக்குரைஞர் மற்றும் சட்ட கல்வியாளர் பி.ஆர்.ஜெயராஜன் பேசுகிறார்.

மத்திய- மாநில அரசுகள் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? என்பதற்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி வணிக நிர்வாக இயல்துறை தலைவர் எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) பேசுகிறார்.

கல்விப்பணியில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் என்ற தலைப்பில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி பேசுகிறார். மதிய உணவு இடைவேளையின்போது நன்னிலம் ஜி.கேசவனின், பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. கலை மற்றும் அறிவியல் படிப்பு பற்றி திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியை ச.ஸ்ரீமதி பேசுகிறார்.

விளையாட்டுத்துறை பற்றி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் செ.பெவின்சன் பேரின்பராஜ் பேசுகிறார். பட்டயக்கணக்கியல் பற்றி மதுரை சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி பேசுகிறார்.

முடிவில் நெல்லை ‘தினத்தந்தி’ மேலாளர் த.ஜனார்த்தனன் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியை மதுரை புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்குகிறார்.

மாணவ-மாணவிகளின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் இந்த ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. அனுமதி இலவசம். நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் மதிய உணவும், காலையிலும், மாலையிலும் தேநீரும் இலவசமாக வழங்கப்படும்.

மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பங்கு பெற விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் நாளை (சனிக்கிழமை) திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரிக்கு காலையிலேயே வந்து தங்களது பெயரை பதிவு செய்து உடனடியாக கலந்து கொள்ளலாம்.

வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் நீட் நுழைவுத்தேர்வு, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன நுழைவுத்தேர்வு (எய்ம்ஸ்) மற்றும் கூட்டு நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.) ஆகிய நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தேர்வில் வெற்றி பெற அரிய ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

வெற்றி நிச்சயம் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு நெல்லை ‘தினத்தந்தி’ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்- 0462-2333355, 2333356 மற்றும் 9841749170, 9841749255. தூத்துக்குடி ‘தினத்தந்தி’ அலுவலகம் 0461- 2325483, 98417 49172 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு வெற்றி நிச்சயம் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்