நெல்லை மாவட்டத்தில் டாக்டர், வியாபாரிகளிடம் ரூ.6 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

நெல்லை மாவட்டத்தில் டாக்டர், வியாபாரிகளிடம் ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-04 22:00 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை யூனியன் உதவி பொறியாளர் பூச்செண்டு தலைமையில் பறக்கும் படையினர் கே.டி.சி. நகர் சோதனை சாவடியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த டாக்டர் துரைராஜ் என்பவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக காரில் வந்தார்.

அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.87 ஆயிரத்து 300 இருந்தது. அந்த பணத்துக்கு துரைராஜிடம் உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுதவிர நேற்று முன்தினம் நெல்லை ராமையன்பட்டி ரோட்டில் கண்டியப்பேரி விலக்கு பகுதியில் பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த பாண்டி என்பவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்டியில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி விலக்கு அருகே நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாங்குநேரி யூனியன் ஆணையாளர் கணபதி அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் வன்னிகோனேந்தல் கூவாச்சிபட்டியை சேர்ந்த லட்சுமண பாண்டியன் என்பது தெரியவந்தது. பின்னர் கைப்பற்றப்பட்ட பணம் நாங்குநேரி தாலுகா அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைசாவடியில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து தென்காசி நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தென்காசியை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி கருப்பசாமி என்பவர் ரூ.1 லட்சத்துடன் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு வேனையும் சோதனை செய்த போது அம்பையை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி முப்புடாதி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம் செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். 

மேலும் செய்திகள்