பசுவந்தனை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் வாக்கு சேகரிப்பு

பசுவந்தனை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் வாக்கு சேகரித்தார்.

Update: 2019-04-04 21:30 GMT
ஓட்டப்பிடாரம்,

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் நேற்று பசுவந்தனை அருகே சுப்பிரமணியபுரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர், கச்சேரி தளவாய்புரம், வெள்ளாரம், குமரெட்டியாபுரம், வெங்கடேசபுரம், கீழமுடிமன், மேலமுடிமன், பி.துரைச்சாமிபுரம், ஆலிபச்சேரி, மீனாட்சிபுரம், விட்டிலாபுரம், குமாரபுரம், வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம், வடக்கு கைலாசபுரம், கீழமங்களம், மேலமங்களம், கப்பிகுளம், ஓ.சரவணபுரம், ஜம்புலிங்கபுரம், குதிரைகுளம், நாகம்பட்டி, பசுவந்தனை ஆகிய பகுதிகளில் சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் பேசியதாவது:-

பசுவந்தனை சுற்று வட்டார கிராமங்களில் கூடுதலாக குடிநீர் வழங்கவும், நாகம்பட்டி மனோ கல்லூரியை அரசு கலை அறிவியல் கல்லூரியாக தரம் உயர்த்தி, கூடுதல் பாடப்பிரிவுகளுடன் புதிய கட்டிடங்களை கட்டவும் ஏற்பாடு செய்வேன். விளாத்திகுளத்தில் இருந்து குமரெட்டியாபுரத்துக்கு இயக்கப்பட்ட பஸ்சை பசுவந்தனை வரை நீட்டிக்க செய்வேன். பசுவந்தனை பகுதியில் உள்ள குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார ஏற்பாடு செய்வேன். மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். எனவே வெற்றியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் பேசினார்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், முன்னாள் யூனியன் தலைவர் காந்தி என்ற காமாட்சி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராஜபாண்டி, பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சவுந்தரராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்