திருக்கோவிலூரில் துணிகரம், ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி

திருக்கோவிலூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் பீரோவை திறந்த வெளியில் வீசிச் சென்றனர்.

Update: 2019-04-04 22:15 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் குமரகுருபரன்(வயது 39). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி, இயற்கை பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் திருக்கோவிலூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இவருடைய வீடு நீண்ட நாட்களாக பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு குமரகுருபரனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் அறைகளில் பணம், நகை உள்ளதா? என பார்வையிட்டதோடு, ஒரு அறையில் இருந்த ஒரு 6 அடி உயர இரும்பு பீரோவை வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக்கு தூக்கிச் சென்றனர். பின்னர் அவர்கள் பீரோவை இரும்பு கம்பியால் நெம்பி திறந்தபோது, அதில் துணிகள் மற்றும் ஆவணங்கள் மட்டுமே இருந்தன. நகை-பணம் இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த மர்மநபர்கள் பீரோவை அங்கேயே போட்டு விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

நேற்று அதிகாலை குமரகுருபரனின் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு கிடந்ததையும், வீட்டின் பின்புறம் திறந்தவெளியில் பீரோ கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை முயற்சி நடந்த வீட்டையும், மர்மநபர்கள் வீசிச்சென்ற பீரோவையும் பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இதனிடையே கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை முயற்சி நடந்த வீடு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்