உடுமலையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
உடுமலையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடப்பட்டது.
உடுமலை,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலை தில்லை நகர் அருகில் உள்ள மாரியப்பா லே-அவுட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் புவனேந்திரன்(வயது 32), விவசாயி. இவர் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் புவனேந்திரன் குடும்பத்தினர் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்தனர். வீட்டைத்திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று நகைகளை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து புவனேந்திரன் உடுமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் திருப்பூரில் இருந்து தடயவியல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம் அங்கு சென்றார். அவர் அந்த வீட்டில் பதிந்திருந்த கைரேகை தடயங்களை பதிவு செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.