கருப்பூர் பகுதியில் கிராமம், கிராமமாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்

கருப்பூர் பகுதியில் கிராமம், கிராமமாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-04-04 21:45 GMT
சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் நேற்று ஓமலூர் மற்றும் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர், கருப்பூர், மேட்டுப்பதி, குண்டூர், தட்டாஞ்சாவடி, மூங்கில்பாடி, சேனைக்கவுண்டனூர், செங்கரடு, தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டி, வட்டக்காடு, நாலுகால்பாலம், தின்னப்பட்டி, சரக்குப்பிள்ளையூர், தும்பிப்பாடி, நாரணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் பொன்னையன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ., வெற்றிவேல் ஆகியோரும் சென்று அ.தி.மு.க.வுக்கு ஓட்டு சேகரித்தனர்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் பேசும்போது, ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். மாமாங்கம் பகுதியில் மத்திய அரசு மூலம் நவீன வசதிகளுடன் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது. மேலும், பல்வேறு திட்டங்களும் வர உள்ளன. மத்திய, மாநில அரசு திட்டங்கள் கிடைக்க அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.

மேலும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வீடு, வீடாக வழங்கியும் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்கள்.

இந்த பிரசாரத்தில் பன்னீர்செல்வம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், கருப்பூர் நகர அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தசாமி, த.மா.கா. மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், பா.ம.க. தேர்தல் பொறுப்பாளர் சதாசிவம், பா.ஜனதா கட்சி மண்டல பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்