மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 460 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 460 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 7,916 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் வாக்குப்பதிவின்போது முதன்மை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை-1, நிலை-2 மற்றும் நிலை-3 என அனைத்து பணிகளுக்கும் ஆசிரியர்களே நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்கப்படும். அந்த வகையில் கடந்த மாதம் 31-ந் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பயிற்சி வகுப்பில் 460 ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இவர்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை என விளக்கம் கொடுத்து உள்ளனர். எனவே அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள், மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொண்டு தேர்தல் பணியில் இருந்து விடுவித்தனர். மேலும் சில ஆசிரியர்கள் தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து உள்ளனர். இவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.