குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-04-04 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வெங்கடா புரம் ஊராட்சி கே.ஏ.நகர் தர்கா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு 2 ஆழ்துளை குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஆழ்துளை குழாயில் தண்ணீர் வற்றியது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.

அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் உள்ள 2 ஆழ்துளை குழாயில் தண்ணீர் வற்றியதால், அருகில் உள்ள ஆழ்துளை குழாயில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றால் அவர்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று கூறி தகராறு செய்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் எடுக்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் 2 பெண்களுக்கு கையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து ஊராட்சி அலுவலர்கள் நேரில் வந்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறியதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்