காவல் பார்வையாளர் திடீர் ஆய்வு: சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
காவல் பார்வையாளர் திடீரென ஆய்வு மேற்கொள்வதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வேலூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியை கண்காணிக்க பொதுப்பார்வையாளர் டபாரியா, அரக்கோணம் தொகுதிக்கு ஸ்ரீநிவாஸ்ஸ்ரீநரேஷ், மாவட்டத்தை கண்காணிக்க காவல் பார்வையாளர் குரிந்தர்சிங்திலான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் பார்வையாளர் குரிந்தர்சிங்திலான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளை திடீரென ஆய்வு செய்து வருகிறார். பரதராமி சோதனைச் சாவடியில் அவர் திடீரென ஆய்வு செய்யும் போது அங்கு போலீசார் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தேவைக்கேற்ப போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட காவல்துறையினர் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 20 சோதனைச் சாவடிகள் உள்ளது. மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக கூடுதலாக தற்காலிகமாக 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடிகளை காவல் பார்வையாளர் குரிந்தர்சிங்திலான் பார்வையிட்டு வருகிறார்.
தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் வகையில் போலீஸ் பற்றாக்குறை ஏற்படும் சோதனைச் சாவடிகளிலும் பணியாற்ற ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களை கூடுதலாக நியமித்து உள்ளோம். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கண்காணித்து வருகிறார்.
அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கண்காணித்து வருகின்றனர். சோதனைச் சாவடிகளில் பணி செய்யாமல் இருக்கும் போலீசாரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமும் தேர்தல் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.