டயர் வெடித்ததில் மரத்தில் கார் மோதி பால் வியாபாரி பலி - கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தபோது பரிதாபம்
கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, டயர் வெடித்ததில் மரத்தில் கார் மோதி பால் வியாபாரி பலியானார். உறவினர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பழனி,
பழனி அருகே உள்ள வயலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 45). பால் வியாபாரி. இவர், தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (40), ரத்தினமூர்த்தி (50), ராமசாமி (45), தங்கவேல் (46) மற்றும் கனகவேல் (50) ஆகியோருடன் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் சென்றார். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று பழனி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அந்த காரை ரத்தினமூர்த்தி ஓட்டினார். பழனியை அடுத்த கணக்கன்பட்டி மூகாம்பிகை கோவில் பகுதியில் வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையே விபத்தை கண்டதும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இதில் ரத்தினமூர்த்தி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான சின்னப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சின்னப்பனுக்கு வனிதா என்ற மனைவியும், கிருஷ்ணன் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர்.