மாவட்டம் முழுவதும் கடுமையாகி வரும் குடிநீர் பிரச்சினை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நகர் புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கோடைக்கால குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தேர்தல் பணி உள்ள போதிலும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-04-03 23:00 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களும், கிராமப்புறங்களும் குடிநீர் தேவைக்கு பெரும்பாலும் நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பி உள்ளன. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், வைகை குடிநீர் திட்டம் போன்ற குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருந்து வந்த போதிலும் கடும் கோடை காரணமாக இந்த திட்டங்கள் மூலம் கிடைக்கும் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் குடிநீர் பிரச்சினை மிக கடுமையாகி வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களை முற்றுகையிட தொடங்கி விட்டனர்.

விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியில் குடிநீர் வினியோகத்திற்கான பிரதான குழாய் உடைந்து விட்டதால் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை. விருதுநகர் நகராட்சி பகுதியிலும் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் அதிகப்படுத்தப்படுகிறது. அருப்புக்கோட்டையில் பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காரியாபட்டி பகுதியிலும் குடிநீர் கேட்டு கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அதிகாரிகளே அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சினையை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தேர்தல் காரணமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மாவட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முறையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்துகளில் நிதிப்பற்றாக்குறை காரணமாக நீர் ஆதார வறட்சி, மின் மோட்டார் பழுது, குடிநீர் குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளையும் சீரமைக்க முடியாத நிலையில் பஞ்சாயத்து செயலர்கள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க வேண்டிய யூனியன் அதிகாரிகள் தேர்தல் பணியில் உள்ளதால் அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் முக்கிய தேர்தல் பணி இருந்தாலும் மாவட்டம் முழுவதும் கடுமையாகி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசிடம் இருந்து தேவையான நிதி உதவி பெற்று கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இல்லையேல் குடிநீர் பிரச்சினையே மாவட்டத்தின் பல பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கு காரணமாகிவிடும்.

மேலும் செய்திகள்