தி.மு.க. மீது களங்கத்தை ஏற்படுத்த வருமானவரி சோதனை திட்டமிட்ட நாடகம் திருப்பூரில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தி.மு.க.மீது களங்கத்தை ஏற்படுத்த வருமானவரி சோதனை திட்டமிட்ட நாடகம் என்று திருப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update: 2019-04-03 23:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் கே.சுப்பராயனை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நேற்று காலை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் என்பது மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல். அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளரான கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித்தர வேண்டும். கதிர் அரிவாள் சின்னத்துக்கு ஆதரவு தந்து கே.சுப்பராயனை வெற்றி பெறச்செய்ய வேண்டும். வெற்றி பெறச்செய்வீர்களா?, நிச்சயமாக?, உறுதியாக? சத்தியமா? (அப்போது கூட்டத்தினர் செய்வோம், செய்வோம் என்று கரஒலி எழுப்பினர்) நன்றி.

அரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்ற ஊர் திருப்பூர். அதனால் இந்த ஊர் திருப்பூர் என்று பெயர் பெற்று இருக்கிறது. இதே திருப்பூரில் 1934–ம் ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். அந்த மாநாட்டுக்கு ஒரு இளைஞனும் வந்திருந்தார். அந்த இளைஞனை பார்த்து பெரியவர் ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். அந்த இளைஞன் நான் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன் என்றார். எதுவும் வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? என்று முதியவர் கேட்டார். ஆனால் அந்த இளைஞன், வேலை தேடிக்கொண்டிருக்கவில்லை என்றான். படித்து பட்டம் வாங்கி வேலை தேடாமல் உள்ளதாக சொல்கிறீர்களே என்று முதியவர், இளைஞனிடம் கேட்டார். உடனே இந்த இளைஞன், நான் வேலை தேடி செல்லப்போவதில்லை. சமூக தொண்டு ஆற்றிட உள்ளேன் என்று சொன்னார். உடனே அந்த பெரியவர் ஆச்சரியமடைந்து அந்த இளைஞனை கட்டிப்பிடித்து, அப்படியென்றால் நீங்கள் என்னோடு வருவீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், தாராளமாக வருகிறேன் என்று பெரியவரோடு புறப்பட்டார்.

1934–ம் ஆண்டு அந்த பெரியவரோடு புறப்பட்ட இளைஞன் தான் 1967–ம் தமிழக முதல்–அமைச்சராக வந்த அறிஞர் அண்ணா. அந்த இளைஞனை தன்னோடு அழைத்து சென்றாரே அவர் தான் பெரியார். ஈரோட்டில் பிறந்த பெரியார். காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா. இருவரையும் சந்திக்க வைத்த ஊர் தான் திருப்பூர். திருப்பூரில் அவர்கள் சந்தித்துக்கொண்ட காரணத்தில் தான் தமிழ் சமுதாயமே விடுதலை பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழனுக்கு சுரணை வந்தது. தமிழனுக்கு உணர்ச்சி வந்தது. தமிழர் தன்மானத்தோடு நடமாடும் சூழ்நிலையை உருவாக்கித்தந்தது. அவர்கள் மூலமாகத்தான் கருணாநிதியை நாம் பெற்று இருக்கிறோம்.

கருணாநிதிக்கும், கே.சுப்பராயனுக்கும் நெருங்கி தொடர்பு உண்டு. கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவையில் கே.சுப்பராயன் எம்.எல்.ஏ.ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்தார். உள்நாட்டு பனியன் உற்பத்திக்கு 4 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. அதை முழுமையாக ரத்து செய்து கொடுக்க வேண்டும் என்று கே.சுப்பராயன் கோரிக்கை வைத்தார். உடனடியாக அந்த வரியை முழுமையாக ரத்து செய்து கொடுத்தவர் கருணாநிதி. அவர் இல்லை என்பதால் அவருடைய மகனான நான் உங்களிடம் ஆதரவு கேட்கிறேன்.

ஓட்டு என்பது நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடியது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி தருவதற்கு அதன் மூலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அக்கிரம ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உங்களுடைய ஓட்டை தர வேண்டும். தேர்தல் நடத்தக்கூடிய ஆணையம் இன்று சுதந்திரமாக செயல்படுகிறதா? அது கேள்விக்குறியாக இருக்கிறது. பிரதமராக இருக்கக்கூடிய மோடி, தன்னாட்சி அமைப்புகளை மிரட்டுகிறார். அச்சுறுத்துகிறார். அவர்களையெல்லாம் வேலையாட்களை போல் இயக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் இந்த நாடாளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நியாயமாக 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றத்தில் எந்த தடையும் இல்லை. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது என்ற காரணத்தால் தேர்தலை நடத்த வேண்டியது இல்லை என்று எந்த விதிமுறையும் இல்லை. 3 தொகுதிகளில் ஏன் தேர்தலை நிறுத்தி வைத்துள்ளார்கள். 3 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் ஆட்சி இருக்க முடியாது. ஆகவே இது சதித்திட்டம். நாற்பதுக்கு நாற்பது என்று சொல்கிறோமோ அதுபோல் உறுதியோடு சொல்கிறேன், 18–க்கு 18 தொகுதிகளில் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. இறந்ததால் அந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. சூலூரையும் சேர்த்து 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு போட்டோம். எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலை நடத்தலாம். தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டு சொன்னது.

ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததா?. இல்லை. இருப்பினும் தேர்தலை அறிவித்துத்தான் தீர வேண்டும். இந்தியா முழுக்க பல கட்டங்களாக தேர்தல் நடப்பதால் இடைத்தேர்தலை அறிவித்துத்தான் தீர வேண்டும். அந்த நிலை வந்தால் என்ன செய்வது என்ற திட்டம்போட்டார்கள். அந்த திட்டத்தின் அடிப்படையில் தான், துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை. அவருடைய மகன் நடத்தும் கல்லூரியில் சோதனை. காலை முதல் மறுநாள் காலை வரை சோதனை நடந்தது. சோதனையில் எதுவும் சிக்கவில்லை. ஒருநாள் முழுவதும் வேட்பாளர் கதிர்ஆனந்த் பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை.

அதற்கு பிறகு இடைவெளி விட்டு மீண்டும் சோதனை நடத்தினார்கள். எங்கோ, யாருடைய வீட்டிலோ பணம் இருந்ததாக கைப்பற்றி இருக்கிறார்கள். எங்களுக்கு என்ன சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால், வந்த அதிகாரிகளே பணத்தை கொண்டு வந்து உள்ளே வைத்து விட்டு பின்னர் துரைமுருகன் மீது பழிபோடுவதுடன் தி.மு.க. மீது களங்கத்தை சொல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று தான். இப்போது எங்களுக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு செய்தி என்ன வருகிறது என்றால் அந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சொல்கிறார்களாம். அதையும் சேர்த்து நிறுத்தினால் என்னவாகும். அந்த தொகுதிகளில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறப்போகிறது என்பது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து 97 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 18 தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றால் 115 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். அ.தி.மு.க.வின் நிலை ஏற்கனவே டி.டி.வி. தினகரன் அணியில் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் அவர்களின் நிலை 100 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கீழே வந்து விடுகிறது. அதனால் ஆட்சி செய்ய தகுதி இல்லாதவர்களாகி விடுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டபிடாரம், விளாத்திக்குளம் 2 இடங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

ஓட்டபிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக வழக்கு இருக்கிறது. விளாத்திக்குளம் இடைத்தேர்தலை நிறுத்த, அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கீதா ஜீவனை தேடிப்போய் சோதனை நடத்துகிறார்கள். திட்டமிட்டு சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் கமி‌ஷனை கேட்டுக்கொள்வது, மோடிக்கு துணை போய் கொண்டிருந்தால் பின்னால் விளைவுகளை நிச்சயமாக சந்திக்கும் சூழல் ஏற்படும். இதை மிரட்டுவதற்காக நான் சொல்லவில்லை. ஜனநாயக அடிப்படையில் சொல்கிறோம். இதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ்நாடு என்று சொல்வார்கள். வந்தாரை வாழ வைக்கும் நகர் தான் திருப்பூர். திருப்பூரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஊர் திருப்பூர். படிப்புக்கு மட்டுமல்ல. உழைப்பு, திறமைக்கு வேலை கொடுக்கும் ஊர். தென்மாநில, வடமாநில தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஊர் திருப்பூர். ஆனால் இன்றைக்கு கவலைக்கிடமாக திருப்பூர் மாறியதற்கு காரணமானவர் ஒருவர் தான். அவர் தான் பிரதமர் நரேந்திர மோடி. மறந்து விடக்கூடாது. திருப்பூர் தொழில் சிறப்பு, செல்வாக்கை இழந்து, வேலையிழந்து வருத்தத்துடன் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் தவறான பொருளாதார கொள்கை. அதை மோடி மேற்கொண்டுள்ளார்.

2014–ம் ஆண்டு திருப்பூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மோடி, திருப்பூர் பனியன் வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியை உயர்த்துவதாக கூறினார். இந்த தேர்தலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் மோடி திருப்பூரில் பிரசாரம் செய்தார். ஏற்கனவே அளித்த உறுதிமொழியை காப்பாற்றி விட்டேன் என்று மோடி சொன்னாரா?. வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று மோடியால் சொல்ல முடியவில்லை. 2013–ம் ஆண்டு திருச்சிக்கு வந்த மோடியை திருப்பூர் தொழில் அதிபர்கள் சந்தித்தனர். அப்போது திருப்பூர் தொழிலுக்கு துணை நிற்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அவ்வாறு மோடி செய்திருக்கிறாரா?. தொழில் அதிபர்களை மோடியிடம் அழைத்துச்சென்றவர்களாவது பதில் சொல்ல முடியுமா?. முடியாது. இந்த டாலர் நகரை நாசமாக்கியது மோடி என்றால் அவரை ஆதரிக்கும் எடப்பாடி அரசும் காரணம். ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி என்று பழமொழி சொல்வார்கள். மோடிக்கேத்த பாடி, பாடிக்கேத்த மோடி. பாடி என்றால் எடப்பாடி. குட்டி சிங்கப்பூராக இருந்த திருப்பூரை சீரழித்தது மோடி மற்றும் அவரை ஆதரிக்கக்கூடிய எடப்பாடியும் தான் முழு காரணம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருப்பூர் வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. இதனால் சிறு, குறு வணிகர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் சிதைந்து போனார்கள். இதற்கு காரணம் பிரதமர் மோடி என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். புதிய வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. வேலையில் இருந்தவர்களும், வேலைவாய்ப்பை இழந்தார்கள். இந்தநிலையில் திருப்பூர் வெறுப்பூர் என்ற நிலைக்கு வந்திருப்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன். 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி சொன்னார். படித்த இளைஞர்கள், பட்டதாரிகளை பார்த்து கேட்கிறேன். மோடி அறிவித்தபடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?. இதுதான் இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அறிவித்து சிறு, குறு தொழில்களை முடக்கியவர் மோடி. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி நடுத்தர மக்களை பாதிப்படையச்செய்ததுடன், சிறுபான்மை மக்களின் நிம்மதியை கெடுத்தவர் தான் மோடி. ஆக இப்படி தொடர்ந்து பட்டியலிட முடியும். இந்தியா முழுமைக்கும் மோடி, தமிழக அளவில் எடப்பாடி, நாட்டையும், நாட்டு மக்களையும் நிம்மதி இல்லாமல் செய்தவர்கள்.

மோடி செல்லும் மாநிலங்களில் கோ பேக் மோடி என்று போராட்டம் நடத்துகிறார்கள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்–அமைச்சர் சென்று பார்க்க முடிந்ததா?. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் எதிர்ப்பு காட்டினார்கள். இந்த தேர்தலில் முதல்–அமைச்சர் தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்தபோது அவர் வேன் மீது செருப்பு விழுந்துள்ளது. அ.தி.மு.க. வை சேர்ந்த தொண்டன் வீசியிருக்கிறார். அ.தி.மு.க. தொண்டனுக்கே வெறுப்பு வந்திருக்கிறது. தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, அ.தி.மு.க. தொண்டனை அடித்த காட்சி வெளிவந்துள்ளது. அந்த தொண்டன் காவல்துறையில் செம்மலை மீது புகார் கொடுத்துள்ளார். நீங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் உங்களை ஓட, ஓட விரட்டுகிறார்கள்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன திட்டங்கள் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறோம். வணிகர்கள், மக்களின் பிரச்சினைகளை குறைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருத்தம் கொண்டு வரப்படும். பூச்சிகளால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கு போலியான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியிருக்கிறார்கள். அதை நீங்கள் நம்பவேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் தேர்தல் அறிக்கையில், அந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளோம். பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டத்தில் புதிய அணை கட்டவும், மேல்நீராறில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து திருமூர்த்தி அணைக்கு எடுத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்ற சி.இ.டி.பி. எனப்படும் கழிவு அகற்றும் பொதுவான திட்ட வசதிகள் செய்து தரப்படும். 2 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் கைத்தறி விற்பனையை அதிகரிக்க காட்சியகம் அமைக்கப்படும். ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

இந்த கொங்கு மண்டலத்தில் இருந்து நமது கழக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சியினர் மட்டுமல்ல. இந்த பகுதி விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். நிலமற்ற, ஏழை விவசாய கூலி தொழிலாளர்கள் தங்களுடைய குடும்ப செலவுக்காக மூக்குத்தி, கம்மல், தாலிக்கொடி போன்றவற்றை பல ஆண்டுகளாக மீட்கப்படாமல் கூட்டுறவு வங்கி, பொதுத்துறை வங்கிகளில் அடமானமாக இருக்கிறது. ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை வைத்துள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

கோடநாடு விவகாரத்தை பற்றி நான் பேசக்கூடாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்கள். ஆனால் நான் பேசுவதில் தவறில்லை என்று கோர்ட்டு கூறிவிட்டது. ஜெயலலிதாவை தான் மக்கள் முதல்–அமைச்சராக தேர்ந்தெடுத்தனர். அவர் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வுக்கும் அவர் தான் முதல்–அமைச்சர். முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்திருக்கிறார். அவர் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம். அதையொட்டி நடக்கும் கோடநாடு பிரச்சினைகளை சொல்கிறோம்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி கொள்ளையடித்த, பினாமி பெயரில் வாங்கி குவித்த சொத்துகள் பற்றியும் விசாரணை நடத்தி அதை வீடியோ ஆதாரமாக பதிவு செய்தனர். அதை கோடநாட்டில் கணினியில் வைத்திருந்தார். ரூ.2 ஆயிரம் கோடி அங்கு இருந்துள்ளது. ஆவணங்களை எடுப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் மூலம் கேரளாவை சேர்ந்த ‌ஷயன் உள்பட 11 பேரை அனுப்பி காவலாளியை கொன்று உள்ளே இருந்த ஆவணங்களை எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து கூலிப்படையினரில் ஒருவரான ‌ஷயன் வெளியே கூறியதால் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

கனகராஜ் மர்மமான முறையில் இறந்தார். ‌ஷயனை விபத்தை ஏற்படுத்தி கொல்ல முயன்றபோது அவர் தப்பினார். விபத்தில் மனைவி, மகளும் இறந்தனர். கனகராஜின் சகோதரர் தனபால், இதை பேட்டியாக வார பத்திரிகையில் கொடுக்கிறார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். ஆனால் இதுவரை எந்த பதிலும் முதல்–அமைச்சர் கூறவில்லை. கொலைப்பழியை சுமந்துள்ள முதல்–அமைச்சரை நாம் பெற்றுள்ளோம் என்றால் அவருக்கு அவமானம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானம்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியது ஒ.பன்னீர்செல்வம் தான். அண்ணா, எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்தபோது சிகிச்சையில் இருந்து இறந்தனர். அவர்களின் உடல்நலம் குறித்து அரசு தொடர்ந்து அறிக்கை வெளியிட்டது. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது முறையாக அறிவிக்கப்பட்டதா?. ஜெயலலிதா இறந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சராக சசிகலா தேர்வு செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து வந்து அவரது காலில் விழுந்தார். அதற்காக எடப்பாடி பழனிசாமியை மண்புழு என்றேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி, மண்புழு என்றால் விவசாயிகளின் நண்பன் என்கிறார். அவர் மண்புழு அல்ல வி‌ஷ புழு. அவரை முதல்–அமைச்சராக தேர்வு செய்த உடன் ஒ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தவம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாகவும், சி.பி.ஐ. விசாரணை தேவை என்றும் தெரிவித்தார். இப்போது துணை முதல்–அமைச்சர் பதவி வழங்கப்பட்டவுடன் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்துவிட்டார்.

ஜெயலிதாவை பற்றி பேச எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். நாட்டின் முதல்–அமைச்சராக இருந்து இறந்த ஜெயலலிதாவை பற்றி பேச வேண்டிய கடமை எதிர்க்கட்சி தலைவரான எனக்கு உள்ளது. நியாயத்தை கேட்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படத்தான் போகிறது. அவ்வாறு ஏற்படும்போது மக்களின் குறைபாடுகள் அத்தனையும் தீர்த்து வைக்கப்படும். அதையும் கடந்து ஒரு பணி இருக்கிறது. கோடநாடு விவகாரம், ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து அதற்கு உரியவர்கள் யார்? அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து, அவர்களை சிறையில் பூட்டி அடைப்பது தான் முதல் வேலை. அதுதான் ஸ்டாலினின் முதல் வேலை. கொலைகார ஆட்சிக்கு முடிவு கட்ட, அதற்கு துணையாக இருக்கக்கூடிய மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட நீங்கள் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்