பறக்கும் படை சோதனையில் ரூ.75 லட்சம் தங்கம்- வைர நகைகள் பறிமுதல்

சென்னையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.;

Update:2019-04-04 04:30 IST
சென்னை,

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தினமும் வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.

அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் இருந்தன. அவற்றை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சென்னை புரசைவாக்கத்தில் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கொடுங்கையூர் சகாயம் நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது.

காரில் வந்த கொடுங்கையூரை சேர்ந்த விஜயகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிகாரி கருணாகரன் உத்தரவின்பேரில் பெரம்பூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற காரை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எல்.இ.டி. டி.வி.க்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி காரில் இருந்த வியாசர்பாடியை சேர்ந்த சந்திரகுமார், ஸ்டாலின் ஆகியோரிடம் கேட்டபோது, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒருவரிடம் அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்தில் மற்றொரு வியாபாரியிடம் கொடுக்க காத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 4 எல்.இ.டி. டி.வி.க்கள், 80 வெளிநாட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்