கத்தியால் கழுத்தை அறுத்து போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை முயற்சி
கோயம்பேடு போலீஸ் நிலையத்தில், கழிவறையில் கத்தியால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை நெற்குன்றம், பெருமாள் கோவில் 5–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது42). இவருடைய மனைவி கவிதா(32). இருவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த 30–ந் தேதி கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், வீட்டில் இருந்த கத்தியால் மனைவி கவிதாவை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார்.
இதில் முகத்தில் வெட்டுக்காயம் அடைந்த கவிதாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கோவிந்தராஜை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்க்க கோவிந்தராஜ் வந்தார். அவரை கைது செய்த போலீசார், கோயம்பேடு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வந்தனர்.
அப்போது கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற கோவிந்தராஜ், சிறிது நேரத்தில் அலறும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார், அங்கு சென்று பார்த்தனர். கோவிந்தராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து போலீஸ் நிலையத்திலேயே கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.