கடன் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி: நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே கடன் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-03 23:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தினர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். கடந்த 6 மாதங்களாக இந்த நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை அறிந்த திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தண்ணீர்குளம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கட்டினார்கள்.

இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து ரூ.2 கோடி வரை வசூலித்த நிதி நிறுவனத்தினர், குறிப்பிட்ட தேதியில் பொதுமக்களுக்கு தருவதாக சொன்ன கடன் தொகையை தராமல் காலம் தாழ்த்தினார்கள்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டி விட்டு தப்பிச்செல்ல முயன்றனர். இதைக்கண்ட காக்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தப்பி ஓட முயன்ற ஊழியர்கள் 2 பேரை மடக்கிப்பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி தரக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், பார்வதி, சாரதி, வாசுதேவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த வழக்கில் நிதிநிறுவன ஊழியர்கள் சத்யா என்கிற அந்தோணி (வயது 29), மணி என்கிற சிவப்பிரகாஷ் (31) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நிதிநிறுவனத்தை நடத்தி வந்த சிவசங்கரி, செபாஸ்டின், கணேஷ் என்கிற கணேசன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்