ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் பெருங்கற்கால சவப்பானை ஓடுகள்
ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் பெருங்கற்கால சவப்பானை ஓடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி,
ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த அருங்காட்சியக கட்டிடம் முழுவதும் கற்களால் வடிவமைக்கப்பட்டு, மேல்தளம் மரத்தால் அமைக்கப்பட்டது. எனவே இது பழமையான பாரம்பரியம் மிக்க கட்டிடமாக உள்ளது. இங்கு மாதந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள், ஓலைச்சுவடிகள், மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள், அஞ்சல் தலைகள், பாறைகள், கனிமங்கள், உலோக கலை பொருட்கள், தோல் பாவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
நீலகிரி வாழ் பறவைகளான வெல்வெட் நெற்றி பசையெடுப்பான், காட்டுப்புறா, மலைச்சிட்டான், சோலைக்குயில், நீலகிரி சிரிப்பான் போன்றவைகளின் புகைப்படங்கள் மின்னணு தகவல் பலகையில் இடம் பெற்று உள்ளது. இசைக்கருவிகளான தாளம், சிப்லா, தவில், புல்லாங்குழல், உறுமி, தமுக்கு, நாதஸ்வரம் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பறவைகள், வனவிலங்குகளின் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி அரசு அருங்காட்சியகத்துக்கு கோடை சீசன், 2-வது சீசனில் கணிசமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவர்கள் காட்சிப்படுத்தப்பட்டவற்றை கண்டு ரசிப்பதுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். மேலும் குதிரை எலும்புக்கூடு, சிற்பங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ரூ.50 லட்சம் செலவில் அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழ்தளத்தில் மரத்தினால் ஆன மேஜைகள் மீது கண்ணாடி பெட்டிகள் வைக்கப்பட்டு, அதற்குள் காட்சி பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அவை நன்றாக தெரியும் வகையில் உள்ளே விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நுழைவுவாயில் கதவில் மரச்சிற்பங்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேல்தளத்தில் தோடர், கோத்தர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய பழங்குடியினரின் பயன்பாட்டு பொருட்கள், வாழும் இடங்களின் மாதிரிகளை கண்ணாடி பெட்டிக்குள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் காட்சி பொருட்கள் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருக்கும். இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்ட பெருங்கற்கால சவப்பானை ஓடுகள் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இவை ஆங்கிலேயரான பிரிக்ஸ் என்பவர் ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்த போது, சுமார் 1820-ம் ஆண்டில் சேகரிக்கப்பட்டவை ஆகும். பன்னிமரா, பொக்காபுரம், செம்மநத்தம், தலைகுந்தா, கீழ்கோத்தகிரி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட சவப்பானை ஓடுகள் வைக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி ஈம சுடுமண்பாண்ட செம்மறி ஆடு, எருமை, சிறுத்தை உருவம் கொண்ட மூடிகள், சுடுமண் ஈமபானைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. பழங்காலத்தில் நீலகிரி மலைகளில் ஈமச்சடங்கில் பயன்படுத்தப்பட்ட பெரிய கற்களால் செய்யப்பட்ட கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இதில் விலங்குகள் மற்றும் உயிரினம் அல்லாத பொருட்களின் உருவங்கள் கொண்ட மூடிகள் உடைய சுடுமண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. கௌால் வடிவமைக்கப்பட்ட வெளிர் காவி நிற மண்பாண்டங்கள், கரிம பொருள் மற்றும் அபிரகத்தினை கொண்டு மிருதுவாக்கப்பட்டு உள்ளன. நெருப்பில் சுடப்பட்டு இருப்பதால், அதன் மையப்பகுதி கருமையாக உள்ளது. வெவ்வேறு சுடுமண் உருவங்கள், பெருங்கற்கால நீலகிரி மக்களின் வெவ்வேறு குலங்களை குறிக்கக்கூடும். இது நம்பத்தகுந்ததாக உள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து என்று அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறினார்.