தேவையை காட்டிலும் கூடுதலாக 521 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன சப்-கலெக்டர் கிராந்திகுமார் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தேவையை காட்டிலும் கூடுதலாக 521 வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பதாக சப்-கலெக்டர் கிராந்திகுமார் கூறினார்.

Update: 2019-04-03 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், சேந்தமங்கலம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,626 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 13½ லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். கடந்த வாரம் வாக்குப்பதிவுக்கு தேவையான கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி சப்-கலெக்டர் கிராந்தி குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சப்-கலெக்டர் கிராந்தி குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,626 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆனால் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகின்றன.

அந்த வகையில் 3,252 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவை. ஆனால் நம்மிடம் 3,773 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. தேவை காட்டிலும் கூடுதலாக 521 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்