‘முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பாடுபடுவேன்’ காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

‘முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பாடுபடுவேன்‘ என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

Update: 2019-04-03 22:30 GMT
தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பகலில் அவர் தேனியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அந்த வகையில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் கள் உறவின்முறை அலுவலகத்துக்கு சென்று உறவின்முறை நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். பின்னர், உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள டி.சிந்தலைச்சேரியில் பிரசாரத்தை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து, லட்சுமிநாயக்கன்பட்டி, தம்மிநாயக் கன்பட்டி, டி.ரங்கநாதபுரம், தேவாரம், டி.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைச்சேரி, அம்மாபட்டி, கோம்பை, உத்தமபாளையம், கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி ஆகிய இடங் களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சி அருமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் அறிக்கையில் சொல்லி உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். மத்திய அரசின் திட்டங்களை தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு கொண்டு வந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடுவேன். விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பாடுவேன். நீர்நிலைகளை மேம்படுத்தி அதிக தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

அவருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

மேலும் செய்திகள்