நகைக்கடை உரிமையாளர் சாவில் திடீர் திருப்பம், தற்கொலைக்கு தூண்டியவர் கைது - 2 பேருக்கு வலைவீச்சு

தேனி அல்லிநகரத்தில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-04-03 22:15 GMT
தேனி,

தேனி அல்லிநகரம் பாண்டியன்நகரை சேர்ந்தவர் ராமு (வயது 50). இவர், தேனி பகவதியம்மன் கோவில் தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர், கடந்த மாதம் 28-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 30-ந்தேதி இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட ராமுவின் வீட்டில் இருந்து அவர் கைப்பட எழுதிய ஒரு டைரி போலீசாருக்கு கிடைத்தது. அந்த டைரியில் அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து இருந்தார். அதில் அவர், ‘தேனியை சேர்ந்த நாகராஜ், குருநாதன்சேட், கணேசன் சேட் ஆகிய 3 பேரிடமும் கடன் வாங்கி இருந்தேன். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் இருந்த நிலையில், 28-ந்தேதி அவர்கள் 3 பேரும் கடைக்கு வந்து அங்கு இருந்த வெள்ளி நகைகள், வங்கி காசோலையை எடுத்துச் சென்று விட்டனர்’ என்று குறிப்பிட்டு, அதனால் தற்காலை செய்து கொள்வதாக கூறியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த இடம் தேனி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், அல்லிநகரத்தில் பதிவு செய்யப்பட்ட தற்கொலை வழக்கு தேனி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் இதுகுறித்து ராமுவின் மகன் சூர்யபிரகாஷ் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதன்பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக நாகராஜ், குருநாதன்சேட், கணேசன் சேட் ஆகிய 3 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதில், நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர், தேனி-மதுரை சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்