திருட்டு வழக்கு காரணமாக ஊருக்கு செல்லவிடாமல் தடுத்ததால் வாலிபரின் கழுத்து அறுப்பு

திருட்டு வழக்கு இருப்பதால் ஊருக்கு வரவேண்டாம் என்று தடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-04-03 22:30 GMT

வேலூர்,

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மீது செல்போன் திருட்டு வழக்கு உள்ளது. இதனால் ஊரில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவருடைய பெற்றோர் குடும்பத்துடன் ஆற்காடு சென்று வசித்து வருகிறார்கள். அவர்களுடன் சந்தோசும் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ் தனது சொந்த ஊரான அடுக்கம்பாறைக்கு சென்றார். இதை அறிந்த அவருடைய பெற்றோர், சந்தோசின் நண்பர்களுக்கு போன் செய்து சந்தோஷ் அடுக்கம்பாறைக்கு வருவதாகவும், அவரை ஊருக்குள் செல்லவிட வேண்டாம் என்றும் கூறி உள்ளனர்.

உடனே சந்தோசின் நண்பர்கள் ரமேஷ், கோபிகிருஷ்ணன், நம்பியார் ஆகிய 3 பேரும் சந்தோஷ் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவரை அடுக்கம்பாறைக்கு செல்லவிடாமல் பாலமதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது சந்தோஷ் ஏன் என்னை இங்கு அழைத்துவந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஊருக்கு சென்றால் பிரச்சினை வரும் என்று கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், தான் வைத்திருந்த கத்தியால் கோபிகிருஷ்ணனின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனே சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த கோபிகிருஷ்ணனை, நம்பியார் ரமேஷ் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்