வானவில் : குழந்தைகளையும் சுமக்கும் சூட்கேஸ்
பயணங்கள் இனிமையாக அமைவதற்கு வசதியாக பல நவீன சாதனங்கள் தினசரி வந்துள்ளன.
சூட்கேஸ்களின் சுமையைக் குறைக்க அதற்கு சக்கரங்கள் வைத்து இழுத்துச் செல்லும் வகையில் வந்துவிட்டது நமக்குத் தெரியும். இப்போது அதிலும் கூடுதல் சிறப்பம்சமாக குழந்தைகளையும் உட்கார வைத்து இழுத்துச் செல்லும் வகையிலான சூட்கேஸ்கள் வந்துள்ளன.
‘மைக்ரோ லேஸி லக்கேஜ்’ என்ற பெயரில் வந்துள்ள இந்த சூட்கேஸ்கள் உங்கள் குழந்தைகளையும் அதில் உட்கார வைத்து இழுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பிடித்துக் கொள்ளும் வகையில் கைப்பிடிகளும் இதில் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதில் அதிகபட்சம் 20 கிலோ எடையுள்ள குழந்தைகளை உட்கார வைக்கலாம். இதனால் குழந்தைகள் உங்கள் கையைவிட்டு எங்கேனும் ஓடிவிடுவாரோ என்று பயப்பட தேவையில்லை, கூட்டத்தில் தேட வேண்டிய அவசியமும் இருக்காது.
அவர்களுக்கும் இவ்விதம் உட்கார்ந்து வருவது மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த சூட்கேஸ்களுக்குள் 18 லிட்டர் அளவில் துணிகளை வைக்க முடியும். ஒன்றரை வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுடன் வெளியூர் பயணிக்கும் பெண்களுக்கு இது மிகவும் உபயோகமானது.
அதிலும் சில சமயம் தனித்து செல்லும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் அமரும்போது அதற்கேற்ற வகையில் சக்கரங்களை வெளியே இழுத்து வைக்கும் வசதி இதில் உள்ளது. வசதியான இந்த சூட்கேஸ் விலை சுமார் ரூ.12,250.